
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் இந்த முறையும் அதிக இடங்களைப் பிடித்து வெற்றிப் பெற வேண்டும் என்று காத்திருக்கும் ராகுல் காந்தி, இதுகுறித்த ஆலோசனைக் கூட்டத்தை இன்று நடத்தினார்.
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 224 தொகுதிகள் கடந்த கர்நாடகாவின் கடந்த தேர்தலில் காங்கிரசு கட்சி 123 இடங்களில் வெற்றிப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
பா.ஜ.க-வுக்கு வெறும் 44 இடங்களும், அதைவிட குறைவாக தேவகௌடாவின் மதச்சார் பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 40 இடங்களும் கிடைத்தன.
இந்த முறையும் அதிக இடங்களில் வெற்றிப் பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரசு கட்சி தீவிரம் காட்டுகிறது.
நாட்டின் பல்வேரு மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள பாஜகவோ, காங்கிரசிடமிருந்து ஆட்சியை கைபற்ற வேண்டும் என்பதில் முனைப்போடு உள்ளது, இதுகுறித்து பாஜகவின் மூத்தத் தலைவர்கள் ஆலோசித்தும் வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருப்பதால் காங்கிரசும், பா.ஜனதாவும் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டன.
பா.ஜனதா தலைவர் எடியூரப்பா "பரிவர்த்தனை யாத்திரை" என்ற பெயரில் தொகுதி வாரியாக சென்றுக் கொண்டிருக்கிறார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதலமைச்சர் சித்தராமையாவும், மாநில காங்கிரசு தலைவரும் யாத்திரைகளை நடத்தி வருகின்ற நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்தினார்.
இதில் காங்கிரசு மூத்த தலைவர்களும், சித்தராமையா தலைமையிலான கர்நாடக மாநில காங்கிரசு தலைவர்களும் பங்கேற்றனர்.
வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரச்சாரம், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் மற்றும் வெற்றி வாய்ப்பு குறைவான தொகுதிகள் உள்ளிட்ட பலவற்றை குறித்து காங்கிரசு தலைவர்களிடம் ராகுல் கேட்டறிந்தார். பிரச்சாரத்தை எந்தெந்த வகைகளில் முன்னெடுத்து செல்வது? என்பது பற்றியும் அவர் விசாரித்து அறிந்தார்.
சமீபத்தில் நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில் ராகுல்காந்தி தனிநபராக போராடி காங்கிரசுக்கு அதிக தொகுதிகளில் வெற்றியைத் தேடி கொடுத்தார். குஜராத்தில் அவர் இந்து கோவில்களுக்குச் சென்றது வரவேற்பைப் பெற்றது. அதே பாணியை கர்நாடகாவிலும் பின்பற்றலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டது.
அப்படி கோவிலுக்குச் செல்வதாக இருந்தால் கர்நாடகாவில் உள்ள எந்தெந்த கோவில்களுக்கு செல்ல வேண்டும்? என்றும் அதற்கேற்ப தனது தேர்தல் சுற்றுப் பயணத்தை வடிவமைக்க வேண்டும் என்றும் ராகுல் கேட்டுக் கொண்டார்.