
இக்கட்டான நேரங்களில் கட்சி மற்றும் அரசியல் தொடர்பான முடிவுகளை தன்னிடம் கேட்காமல், என்னையே தீர்மானிக்கும்படி சசிகலா கூறியதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன் நேற்று சந்தித்து பேசினார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதும் டிடிவி தினகரன் சசிகலாவை சந்தித்து விட்டு எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்று கொண்டார்.
இதையடுத்து முறைப்படி பதவி ஏற்ற பிறகு சசிகலாவை டிடிவி தினகரன் சந்திப்பது இதுவே முதல் முறை ஆகும்.
பரபரப்பான அரசியல் சூழலில் சசிகலாவை தினகரன் மீண்டும் நேற்று சந்தித்து பேசி உள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினகரனின் தீவிர ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்டோரும் டிடிவி தினகரனுடன் பெங்களூரு சென்றனர். சசிகலாவை சந்தித்து பேசினர்.
இந்நிலையில் சசிகலாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், சிறையில் சசிகலா மவுனவிரதம் இருப்பதால் எழுத்து மூலம் பேசியதாகவும் சைகை மூலம் பேசியதாகவும் தெரிவித்தார்.
மேலும் இக்கட்டான நேரங்களில் கட்சி மற்றும் அரசியல் தொடர்பான முடிவுகளை தன்னிடம் கேட்காமல், என்னையே தீர்மானிக்கும்படி சசிகலா கூறியதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.
18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கின் இறுதி தீர்ப்பிற்காக காத்திருக்கிறேன். இந்த தீர்ப்பு வந்த பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்துவோம் என குறிப்பிட்டார்.