தமிழகத்தில் பிரசாரத்தைத் தொடங்கும் ராகுல் காந்தி... மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ்..!

By Asianet TamilFirst Published Dec 2, 2020, 8:54 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டம் மற்றும் பேரணியில் பங்கேற்குமாறு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் ஒவ்வொரு கட்சியும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக 40 முதல் 50 தொகுதிகளையும் பாஜக கேட்டுள்ளது. அதுதொடர்பான பட்டியலையும் அதிமுகவிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் சென்னை வந்தபோது வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிமுக தரப்போ 25 தொகுதிகள் வரை வழங்க தயாராக இருப்பதாகக் கூறியதாகவும் கூறப்படுகிறது.


அதிமுக - பாஜக கூட்டணி நிலவரம் வேகம்பிடித்துள்ள நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும் திமுக தலைவரை அடிக்கடி சந்திக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலினை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது இரு கட்சிகளின் முன்னணியினரும் உடன் இருந்தனர். 
இந்த சந்திப்புக்குப் பிறகு தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.  ஏர்கலப்பை பேரணியிலும் ராகுல் கலந்துகொள்ள உள்ளார். இதில் ராகுலுடன் சேர்ந்து பங்கேற்குமாறு மு.க. ஸ்டாலினை அழைத்தோம். பிரசார நடக்கும் இடங்களை விரைவில் அறிவிப்போம். இந்தச் சந்திப்பின்போது தமிழக அரசியல் கள நிலவரம் குறித்து விவாதித்தோம். ஆனால், தொகுதி பங்கீடு தொடர்பாக மு.க. ஸ்டாலினுடன் பேசவில்லை” என்று தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார். 

click me!