பாமகவை வன்முறை கட்சியாக அதிமுக காட்டிவிட்டது... திமுக கூட்டணி கட்சியின் குண்டக்கமண்டக்க கணக்கு..!

By Asianet TamilFirst Published Dec 2, 2020, 8:30 PM IST
Highlights

தமிழகத்தின் ஆளுங்கட்சி நினைத்தது போல மக்கள் மத்தியில் பாட்டாளி மக்கள் கட்சி வன்முறை கட்சியாக காட்ட வேண்டும் என்பதில் வெற்றி அடைந்திருக்கிறார்கள் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 

இது தொடர்பாக ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “பாமக அறிவித்த போராட்டத்திற்கு அரசாங்கத்தின் தரப்பில் இடமாற்றம் செய்யப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டதாக அன்புமணி ராமதாஸ் சொல்கிறார். அரசாங்கத் தரப்பில் அனுமதி அளிக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. போராட்டம் நடத்துவதற்கு இடத்தை ஒதுக்கி தந்துவிட்டு பல மாவட்டங்களில் இருந்து பாமகவினர் சென்னை நோக்கி வந்த பின்னால் தடுத்து நிறுத்தியது ஏன் எனத் தெரியவில்லை என்று அக்கட்சியினர் தெரிவிக்கிறார்கள். நடந்த வன்முறைகளுக்கு பாமகதான் காரணம் என்றும் தமிழக அரசாங்கமும், தமிழக காவல்துறைதான் காரணம் என்று பாமகவும் மாறி மாறி குற்றம் சாட்டுகிறார்கள்.
போராட்டத்திற்கு அனுமதி அளித்துவிட்டு போராட்டத்தில் கலந்து கொள்ள வருபவர்களை சென்னை மாநகர எல்லையில் தடுத்து நிறுத்திய பிறகுதான் வன்முறை நடந்தது. அந்த வகையில் பாமக தொண்டர்களை தமிழக உளவுத்துறை வன்முறை செய்ய தூண்டியதா என்று கேள்வி எழுகிறது. 1980-களில் இடஒதுக்கீட்டுக்காக பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டங்களில் அளவில்லா வன்முறை நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். கொஞ்சம் கொஞ்சமாக தாங்கள் அனைத்து சமுதாயத்திற்குமான இயக்கமாகவும், தமிழகத்தில் அனைவரும் ஏற்று கொள்வதற்கான கட்சியாகவும், வன்முறை கட்சி கிடையாது என்ற மாற்றத்தை ஏற்படுத்தவும் கடந்த 30 ஆண்டுகளாக ராமதாஸ் முயற்சித்து வருகிறார்.
நேற்று நடந்த வன்முறைகளால் 30 ஆண்டுகால பாமகவினுடைய முயற்சி வீணானது. மக்கள் மத்தியில் பாமக வன்முறையை கையில் எடுப்பார்கள் என்ற எண்ணத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த நிகழ்வு தமிழக உளவுத்துறையின் திட்டமிட்ட செயல்பாடாக பார்க்கப்படுகிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்கான இடஒதுக்கீடு 20 சதவீதமாக இருக்கிறது. அந்த 20 சதவீதத்தையும் பாமக வன்னியர்களுக்கு கேட்டால் அந்தப் பட்டியலில் இருக்கின்ற மற்ற சமுதாயங்கள் இடஒதுக்கீடு இல்லாமல் அநாதையாக விடப்படுகிறார்களா என்ற கேள்வியும் மற்ற சாதியினரிடம் எழுந்திருக்கிறது.

 
தமிழக முதல்வர் சாதிவாரி கணக்கெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கான ஆணையம் அமைப்போம் என்று முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இப்போதைக்கு தாமதப்படுத்தி தட்டிக்கழிக்கும் முயற்சி என்று பாமக நிறுவனர் சொல்லி இருப்பதன் மூலம் இந்த போராட்டத்தில் பலன் கிடைக்கவில்லை என்று பாமக ஒப்புக்கொண்டிருக்கிறது. அப்படி என்றால் தமிழகத்தின் ஆளுங்கட்சி நினைத்தது போல மக்கள் மத்தியில் பாட்டாளி மக்கள் கட்சி வன்முறை கட்சியாக காட்ட வேண்டும் என்பதில் வெற்றி அடைந்திருக்கிறார்கள்.


சென்ற பாராளுமன்ற தேர்தலுக்கு சற்று முன்னால் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் அதிமுகவுக்கும் நடந்து கொண்டிருந்த வார்த்தை போர் தேர்தல் நேரத்தில் இரண்டு கட்சி தொண்டர்களையும் இணைந்து செயல்பட விடவில்லை. அதிமுகவினுடைய ஓட்டுக்கள் பாமக வேட்பாளர்களுக்கு விழவில்லை என்பது அரசியல் வல்லுநர்களுடைய கருத்தாக இருந்தது. சட்டமன்ற தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில் பாமக தொகுதிகளை அதிகம் பெறுவதற்காக அதிமுக ஆட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்று அதிமுக தொண்டர்கள் நினைக்கிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால் இரண்டு கட்சி தொண்டர்கள் இணைந்து பணியாற்றுவது சந்தேகத்திற்குரியதாகும்” என அறிக்கையில் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 

click me!