மிஸ்டர் மோடி உங்கள தூங்கவிடமாட்டோம்… எப்போ விவசாயிகளின் கடன்கள ரத்து செய்யப் போறீங்க?

By Selvanayagam PFirst Published Dec 19, 2018, 9:26 AM IST
Highlights

இந்தியா முழுவதும் உள்ள  அனைத்து விவசாயிகளின்  கடன்களை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை நாங்கள் தூங்க விடமாட்டோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக கூறியுள்ளார்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுவந்த பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. இங்கு காங்கிரஸ் சார்பில் புதிய முதலமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

ஆட்சி பொறுப்பேற்றால் 10 நாட்களில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது.  அதன்படி, மத்திய பிரதேச மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட கமல்நாத், தேர்தல் வாக்குறுதி அளித்தபடி விவசாய கடன் தள்ளுபடி செய்யும் கோப்பில் முதல் கையெழுத்திட்டார்.

]

இதே போல் காங்கிரஸ் கட்சி புதிதாக பொறுப்பேற்றிருக்கும் சத்தீஷ்கர் மாநிலத்திலும் விவசாயிகளின் 6 100 கோடி ரூபாயை அந்த அரசு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் நாடாளுமன்றத்துக்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம்  பேசினார், அப்போது, ‘பிரதமர் மோடியின் ஆட்சியில் நாடுமுழுவதும் விவசாயிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களாக இருக்கும் 15 தொழிலதிபர்கள் பெற்ற கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார். அவர்களில் அனில் அம்பானியும் ஒருவர்.

ஆனால் வாழ வழியில்லாமல் தவிக்கும் அப்பாவி விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய பிரதமர் மோடி தயாரில்லை என குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் ஆட்சியமைத்தால் 10 நாட்களில் விவசாயக் கடனை தள்ளுபடி செய்வோம் என வாக்குறுதி அளித்தோம். ஆனால் பதவியேற்ற 6 மணிநேரத்திலேயே இரண்டு மாநிலங்களில் விவசாயக் கடனை தள்ளுபடி செய்துள்ளோம்என பெருமிதம் தெரிவித்தார்.

அனைத்து விவசாயக் கடனையும் தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை நாங்கள் தூங்கவிடப் போவதில்லை என்றும் ராகுல்காந்தி அதிரடியாக தெரிவித்தார்.

click me!