ரபேல் தீர்ப்பு... முறைகேட்டை விசாரிக்க கதவு திறந்துள்ளது.... தீர்ப்பின் அம்சங்களைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி அதிரடி!

By Asianet TamilFirst Published Nov 15, 2019, 7:19 AM IST
Highlights

“பாஜக தீர்ப்பை முழுவதுமாகப் பார்க்காமல் வரவேற்றுள்ளது. தீர்ப்பின் 73 மற்றும் 86-வது பத்தியில் கூறப்பட்டுள்ள அம்சங்களில், இதுகுறித்து சிபிஐயோ அல்லது வேறு எந்த விசாரணை அமைப்போ விசாரணை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதை திசை திருப்ப பாஜக முயற்சி செய்கிறது” என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ரபேல் போர் விமானம் ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்துவதற்கான பெரிய கதவு திறக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் வாங்கப்பட்ட ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. முந்தைய காங்கிரஸ் அரசில் நிர்ணயித்த தொகையைவிட அதிக விலைக்கு பாஜக அரசு வாங்கியது அதில் முக்கியமாகக் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டாகும். இதுதொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது. பிறகு தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களின் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், ரபேல் ஒப்பந்ததில் எந்த சந்தேகமும் இல்லை என்று அந்த மனுக்களை தள்ளுபடி செய்துவிட்டது.

 
ரபேல் முறைகேடு தீர்ப்பை பாஜகவினர் கொண்டாடிவரும் நிலையில், காங்கிரஸ் கட்சி தீர்ப்பில் கூறப்பட்டுள்ள அம்சங்களைப் பகிர்ந்துவருகிறார்கள். தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா, “பாஜக தீர்ப்பை முழுவதுமாகப் பார்க்காமல் வரவேற்றுள்ளது. தீர்ப்பின் 73 மற்றும் 86-வது பத்தியில் கூறப்பட்டுள்ள அம்சங்களில், இதுகுறித்து சிபிஐயோ அல்லது வேறு எந்த விசாரணை அமைப்போ விசாரணை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதை திசை திருப்ப பாஜக முயற்சி செய்கிறது” என்று தெரிவித்துள்ளார்.


இதேபோல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சீராய்வு மனுக்களை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான ஜோசப் தீர்ப்பில் 86வது பத்தியில் தெரிவித்துள்ள கருத்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ட்விட்டர் பதிவில், “ரபேல் ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்துவதற்கான பெரிய கதவை உச்ச நீதிமன்ற நீதிபதி ஜோசப் திறந்துள்ளார். இப்போதே முழு அக்கறையுடன் விசாரணையைத் தொடங்க வேண்டும். இந்த முறைகேடு பற்றி விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

click me!