
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் சக பயணிகளுடன் வரிசையில் நின்று விமானத்தில் ஏறிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ‘வைரலாக’ பரவி வருகிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.
வரிசையில் நின்று
குஜராத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் ராகுல், சோனியாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக நேற்று முன்தினம் காலை டெல்லி சென்றார்.
பின்னர் மீண்டும் டெல்லியில் இருந்து ‘இண்டிகோ’ விமானம் மூலம் அகமதாபாத் திரும்பினார். இதற்காக டெல்லி விமான நிலையத்திற்கு அவர் வந்தபோது, சக பயணிகளுடன் வரிசையில் சென்று விமானத்தில் ஏறினார்.
டுவிட்டர் பக்கத்தில்
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், ராகுல் வரிசையில் நின்று விமானத்தில் ஏறுவது போன்ற புகைப்படத்தை இண்டிகோ நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு முன் கடந்த ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ராகுல் ஏடிஎம்., ஒன்றில் வரிசையில் நின்று பணம் எடுத்த போட்டோ இதே போன்று வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.