
குஜராத் மக்களிடம் பிரதமர் மோடியின் மாயஜாலப் பேச்சு பலிக்காது மக்கள் ஏமாறமாட்டார்கள் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல்
குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் 4, 9 ந்தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் போட்டி போட்டி பிராசாரம் செய்து வருகின்றனர்.
ஜாகோட் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியதாவது-
மாயஜால வித்தைக்காரர்கள்
குஜராத் தேர்தலில் பிரசாரம் செய்தற்காக ஏராளமான ‘மாயஜால’ வித்தைக்காரர்களை பா.ஜனதா அழைத்து வந்துள்ளதாக நாளேடுகளில் செய்து வந்துள்ளது. பா.ஜனதா கட்சிக்கென்று பிரத்யேகமாக ‘ஒரு மாயஜால’ வித்தைக்காரர்(பிரதமர் மோடி) இருக்கிறாரே, 22 ஆண்டுகளாக மாநிலத்தில் மாயஜாலம் செய்து வந்தவரே, பிறகு எதற்கு இத்தனை மாயஜால வித்தைக்காரர்கள் என்று நினைத்தேன்.
மக்களிடம் எடுபடாது
ஆனால், அந்த கட்சியின் சொந்த மாயஜால வித்தைக்காரரின் பேச்சு இந்த முறை மக்கள் மத்தியில் எடுபடாது, தோற்றுவிடும் என பா.ஜனதா கட்சி அச்சப்படுகிறது. ‘மாயஜால’ வித்தைக்காரர் பேச்சு மக்கள் மத்தியில் எடுபடாததால், அதிகமான, மாயஜால வித்தைக்காரர்களை அந்த கட்சி அழைத்து வந்துள்ளது.
பொய் வாக்குறுதி
கடந்த 2007ம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடி, அங்குள்ள பழங்குடியின மக்களிடம் ‘வன பந்து திட்டத்தின்கீழ்’ ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்குவேன் என்று உறுதியளித்தார். அதன்பின் 5 ஆண்டுகள் கழித்து, தேர்தலின்போது, ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்குவேன், எனக் கூறி வாக்குக் கேட்டார். இந்த முறை மீண்டும் வந்துள்ள அவர் ரூ. ஒரு லட்சம் கோடி தருவேன் என உறுதியளிக்கிறார்.
நானோ கார் எங்கே?
ஆனால், மோடி டாடா நிறுவனத்துக்கு மட்டும் ஒரு நிமிடத்தில்
ரூ.33 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளார். மின்சாரம், நர்மதா அணை நீர்
ஆகியவை டாடா நிறுவன தொழிற்சாலைக்கும், 10 தொழில் அதிபர்களுக்கும்
ஒதுக்கப்பட்டன.
குஜராத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக இந்த முறை ஆயிரம்
கிலோமீட்டர் வரை அலைந்துவிட்டேன், ஆனால், ஒரு நானோ
காரைக் கூட பார்க்கவில்லை. பொதுமக்களின் ரூ.33 ஆயிரம் கோடியை
ஒரு நிமிடத்தில் துடைத்துவிட்டாரே இதுதான் மாயஜாலம்.
இதுதான் மாயஜாலம்
மற்றொரு மாயஜாலம் என்பது,ஒட்டுமொத்த ரூபாய் நோட்டுகளையும்
செல்லாதாக்கி அறிவித்து, நாட்டு மக்கள் அனைவரையும் வரிசையில்
நிற்கவைத்தது.
நாட்டில் உள்ள அனைத்து கொள்ளையர்களும், தங்கள் கருப்பு பணத்தை
வெள்ளையாக மாற்ற செய்யப்பட்ட மாயஜாலம். ஆனால், நரேந்திர மோடி
நான் கருப்புபணத்துக்கு எதிராக போராடுகிறேன் என்று பேசுகிறார்.
ரூ.80 கோடி எப்படி?
இந்த மாயஜாலத்தைப் பயன்படுத்திதான் தனி மனிதர் ஒருவர்(அமித்ஷா மகன் ஜெய் ஷா) ரூ.50 ஆயிரத்தை ரூ.80 கோடியாக மாற்றி இருக்கிறார். ஆனால், பிரதமர் மோடியோ நாங்கள் லஞ்சம் வாங்கமாட்டோம், யாரையும் வாங்கவும் விடமாட்டோம் என்கிறார்.
பிரதமர் மோடி நீங்கள் என்ன காவலாளியா அல்லது கொள்ளையர்களுன் கூட்டாளியா என்று மக்கள் கேட்கிறார்கள். சொல்லுங்கள், எந்த மாயஜாலம் மூலம் ரூ.50 ஆயிரம், ரூ.80 கோடியாக மாறியது.
எதுவுமே செய்யவில்லை
விவசாயிகளுக்கும், வேலையில்லாத இளைஞர்களுக்கும், சிறு வர்த்தகர்களுக்கும் ஏதாவது மோடி செய்வார் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், 22 ஆண்டுகளாக அவர் எதையுமே செய்யவில்லை.
நான் இங்கு உங்களுக்கு ரூ.15 லட்சம் தருவேன் என்று உறுதியளிக்க வரவில்லை. ஆனால், நாங்கள் ஆட்சியில் அமர்ந்தால், தனி ஒருவர் ரூ.33 ஆயிரம் கோடி பெறமாட்டார் என்று உறுதியளிக்கிறோம். அதற்கு பதிலாக, சிறந்த கல்வி, சுகாதார வசதிகளை செய்து தருவோம்
இவ்வாறு அவர் பேசினார்.