
எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைப்புக்கு பிறகு, இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டிடிவி தினகரன் சார்பிலும், ஓ.பன்னீர்செல்வம் சார்பிலும் தலைமை தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக எடப்பாடி-பன்னீர் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உத்தரவிட்டது.
இந்த நிலையில், அணிகள் இணைந்தாலும், மனங்கள் இணையவில்லை என்று ஓ.பி.எஸ்.-ன் ஆதரவாளர் மைத்ரேயன் எம்.பி. டுவிட் செய்திருந்தார். அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே அதிருப்தி நிலவி வருகிறது.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ஐந்து வருடம் அதிமுக ஆட்சி நடத்த வேண்டும் என்றுதான் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் 5 வருடம் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் என் விருப்பம் என்றார்.
கட்சியில் ஏற்படும் குழப்பம் ஆட்சியில் பிரதிபலிக்கும் என்பதால், ஆட்சியில் குழப்பம் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த கருத்தை தெரிவிப்பதாகவும் கூறினார்.
அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை இருந்தாலும் மக்களுக்கு நல்லது நடக்காது என்று நினைக்கத் தோன்றுகிறது என்ற தமிழிசை, அவர்களுக்கு பிரச்சனை ஏற்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. உட்கட்சி பிரச்சனையால் இரட்டை இலையை தனித்தனி இலையாக ஆக்கிவிடக் கூடாது என்றும் கூறினார்.