
தற்போதைய சூழலில் தமிழகத்திற்கு தேவையான சரியான அரசியல் தலைமை கமல்ஹாசன் கிடையாது என திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம், வயது முதிர்வினால் திமுக தலைவர் கருணாநிதியின் ஓய்வு ஆகியவற்றால், தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிப்பதோடு மக்களும் அவ்வாறாகவே கருதுகின்றனர்.
இந்நிலையில், அந்த அரசியல் வெற்றிடத்தை நிரப்ப கமல், ரஜினி ஆகியோர் முயற்சித்துவருகின்றனர். தீவிர அரசியலில் ரஜினி இறங்கப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது அரசியல் பிரவேசம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அவரும் அரசியல் குறித்து வெளிப்படையாக எதுவும் பேசுவதில்லை. தற்போதைக்கு அரசியலில் ஈடுபடும் ஐடியா ரஜினிக்கு இல்லை என்றே தோன்றுகிறது.
ஆனால், கமலோ அமைச்சர்களின் மீதான குற்றச்சாட்டுகளைக் கடந்து, களத்தில் இறங்கி தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்துவிட்டார். அவரது பிறந்தநாளன்று, புதிய செயலி ஒன்றையும் ஹேஷ்டாக்குகளையும் அறிமுகம் செய்தார். கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபடுவது உறுதி எனவும் அரசியல் கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கமல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த திரைப்பட இயக்குநர் அமீரிடம், தமிழக அரசியல் தலைமையில் உள்ள வெற்றிடம் மற்றும் கமலின் அரசியல் பிரவேசம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தற்போதைய சூழலில் தமிழகத்திற்கு தேவையான சரியான அரசியல் தலைமை கமல் கிடையாது என கூறியுள்ளார்.
அமீர் அளித்த பதிலில், தற்போதைய சூழலில் தமிழகத்திற்கு வேறு ஒரு தலைமை தேவைப்படுகிறது. ஆனால் அதற்கு தகுதியான நபராக கமல் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய நிலையில், கமல் சரியான அரசியல் தலைமை கிடையாது. ஆளும் அதிமுக அரசை விமர்சிப்பதிலேயே கமலின் கவனம் உள்ளது. அதிமுக அரசை டுவிட்டரில் விமர்சிப்பதில் கமல் முனைப்பு காட்டுகிறாரே தவிர, மக்கள் பிரச்னைகளை முன்னெடுக்கவில்லை. டுவிட்டரில் கருத்தை பதிவிடுவது என்பது களத்தில் இறங்கி மக்களை சந்திப்பது என்றாகிவிடுமா? கண்டிப்பாக கிடையாது. அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் 8 கோடி மக்களும் டுவிட்டரில் இருக்கிறார்களா? இல்லை. மக்களின் பிரச்னைகளை முழுமையாக உள்வாங்கினால்தான் தலைமை பண்பிற்கு சரியாக இருக்கும். அவரது அரசியல் பிரவேசம் எந்த அளவிற்கு வெற்றியை கொடுக்கும் என்பது களத்தில் இறங்கினால் தான் தெரியும் என அமீர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதேநேரத்தில் சீமானின் கொள்கைகளும் சிந்தனைகளும் அவரது பார்வைகளும் தெளிவாக உள்ளதாக அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.