
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் நான் பிரதமராக பொறுப்பேற்பேன் என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அதிரடியாக தெரிவித்துள்ளார். ராகுல், இது போன்று கருத்து தெரிவித்துள்ளது இதுவே முதல்முறையாகும்
கர்நாடகாவில் வரும் 12 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பல முக்கிய விஷயங்களில் பிரதமர் மோடி மவுனமாக உள்ளார். ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து அவர் இதுவரை வாய் திறக்கவில்லை. அரசியல் சாசன அமைப்புகளை பாஜக தொடர்ந்து குறிவைத்து வருகிறது என குற்றம்சாட்டினார்.
.அமித்ஷா மீது கொலை குற்றச்சாட்டு உள்ளது. அமித்ஷா மீது நம்பகத்தன்மை இருப்பதாக நினைக்கவேண்டாம். பாஜக தலைவர் கொலை குற்றச்சாட்டுடன் உள்ளவர் என்பதை இந்திய மக்கள் மறந்து விட்டனர். நேர்மையை பற்றி பேசும் கட்சி, அதன் தலைவராக கொலைக்குற்றச்சாட்டு உள்ளவரை கொண்டுள்ளது எனறும் அவர் குற்றம்சாட்டினார்.
ஊழல் வழக்கில் சிறை சென்றவரை முதலமைச்சர் வேட்பாளராக்கியது ஏன் எனவும், ரெட்டி சகோதரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது ஏன் எனவும் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவிடம் கர்நாடக மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
கர்நாடக மக்கள் இதற்கான பதிலை எதிர்பார்க்கின்றனர் என்று கூறிய ராகுல் காந்தி, . அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் நான் பிரதமராக பதவி ஏற்பேன் எனவும் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் பிரதமர் ஆவேன் என ராகுல் காந்தி தற்போதுதான் முதன் முறையாக வாய்திறந்து பேசியுள்ளார். இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.