பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடுவதில் வழிகாட்டுகிறது பஞ்சாப்... தகவல் தெரிவிப்போருக்கு 5 ஆயிரம் பரிசு கொடுக்கிறது!

By Asianet TamilFirst Published Oct 28, 2019, 8:46 AM IST
Highlights

இதற்காக ‘தாண்ட்டிரெஸ்ட் பஞ்சாப் மிஷின்’ என்ற பெயரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதன்படி பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடாதவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. மேலும் பயனற்ற ஆழ்துளை கிணறுகள் இருப்பது பற்றி தகவல் தெரிவிப்போருக்கு 5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
 

பஞ்சாபில் பயனற்ற ஆழ்துளை கிணறுகள் உள்ள தகவலை தெரிவிப்போருக்கு சன்மானம் வழங்கும் திட்டம் உள்ளது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் பயனற்ற ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுவது தொடர்கதையாகிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளில் 13 குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள்  தெரிவிக்கின்றன. தற்போது மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை ஆழ்துளை கிணறில் விழுந்து இரண்டரை நாட்கள் கடந்துவிட்ட நிலையில், குழந்தையை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. 87 அடி ஆழத்தில் சிக்கியிருக்கும் குழந்தையின் நிலை தற்போது என்ன என்பது  தெரியாத நிலையில் திக்..திக்..மனநிலையோடு மீட்பு பணிகள் தொடர்கின்றன.


ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுர்ஜித் விழுந்ததையடுத்து பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடாதது குறித்த விஷயங்கள் கேள்விகளாக எழுப்பப்பட்டுவருகின்றன. இதற்கிடையே பஞ்சாபில் ஆழ்துளை கிணறுகளை மூடும் வண்ணம், பயனற்ற ஆழ்துளை கிணறுகள் இருப்பது பற்றி தகவல் தெரிவிப்போருக்கு சன்மானம் கொடுக்கும் திட்டம் செயல்பட்டுவருவது தெரியவந்துள்ளது. பஞ்சாபிலும் ஆழ்துளை கிணறில் விழுந்து குழந்தைகள் இறப்பது தொடர்கதையாகவே இருந்தது. 
இந்த ஆண்டு ஃபதேவீர் சிங் என்ற இரண்டு வயது குழந்தை ஆழ்துளை கிணறில் விழுந்து 110 மணி நேரம் கடந்து மீட்கப்பட்டது. ஆனால், மூச்சுத் திணறலால் குழந்தை சடலமாகவே மீட்கப்பட்டது. இதையடுத்து பஞ்சாபில் பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ‘தாண்ட்டிரெஸ்ட் பஞ்சாப் மிஷின்’ என்ற பெயரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதன்படி பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடாதவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. மேலும் பயனற்ற ஆழ்துளை கிணறுகள் இருப்பது பற்றி தகவல் தெரிவிப்போருக்கு 5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது. பொதுமக்கள் மூடப்படாத மற்றும் பயனற்ற ஆழ்துளை கிணறுகளை பற்றி தகவல் தெரிவித்துவருகிறார்கள் கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கி இப்போது வரை சுமார் 50 சதவீதம் பயனற்ற ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் பஞ்சாப் அரசு வழிகாட்டுகிறது. இனியாவது, அதை தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் பின்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  

click me!