மகாராஷ்டிராவில் பாஜகவை தனித்துவிட திட்டம்... சிவசேனாவுக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு என அதிரடி அறிவிப்பு!

By Asianet TamilFirst Published Oct 28, 2019, 7:28 AM IST
Highlights

முதல்வர் பதவியை சுழற்சி முறையில் இரண்டரை ஆண்டுகள் பகிர்வது, அமைச்சரவையில் 50 சதவீதம் தேவை என நிபந்தனை விதித்தது. இந்த நிபந்தனைகளை எழுத்துப்பூர்வமாகத் தேவை என்றும் சிவசேனா வலியுறுத்தியது. ஆனால், முதல்வர் பதவியை விட்டுத் தர முடியாது என பாஜக கூறிவிட்டது.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு இடையே இழுபறி நீடித்துவரும் நிலையில் சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளிப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளன. 
288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் மெஜாரிட்டிக்கு சபாநாயகருடன் சேர்த்து 146 உறுப்பினர்கள் தேவை. தேர்தலில் பாஜக 105 தொகுதிகளையும். அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 தொகுதிகளையும் வென்றன. பெரும்பான்மையைவிட 15 உறுப்பினர்கள் எண்ணிக்கை இந்தக் கூட்டணிக்கு உள்ளது. எனவே, பாஜக- சிவசேனா கூட்டணி ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிவசேனா கட்சி பாஜகவுக்கு அதிரடியாக நிபந்தனைகளை விதித்தன.


முதல்வர் பதவியை சுழற்சி முறையில் இரண்டரை ஆண்டுகள் பகிர்வது, அமைச்சரவையில் 50 சதவீதம் தேவை என நிபந்தனை விதித்தது. இந்த நிபந்தனைகளை எழுத்துப்பூர்வமாகத் தேவை என்றும் சிவசேனா வலியுறுத்தியது. ஆனால், முதல்வர் பதவியை விட்டுத் தர முடியாது என பாஜக கூறிவிட்டது. இந்த விஷயத்தில் இரு கட்சிகளும் பிடிவாதமாக உள்ளதால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆட்சி அமைப்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், சிவசேனாவுக்கு ஆதரவு என காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் அதிரடியாக அறிவித்துள்ளன. 
இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாஹேப் தோரட் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சிவசேனாவுக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் கட்சி தயார். இதை அக்கட்சிக்கும் தெரியப்படுத்தியுள்ளோம். ஆனால், இதுவரை சிவசேனாவிடமிருந்து  பதில் வரவில்லை. சாதகமான பதில் வந்ததும் காங்கிரஸ் தலைமையுடன் பேசி இறுதி செய்யப்படும்.” எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவியை  தற்போது வழங்கி, பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர பாஜக தீவிர முயற்சி செய்துவருகிறது.

click me!