#BREAKING இனியும் அவமானத்தை தாங்க முடியாது.. பஞ்சாப் முதல்வர் பதவியை தூக்கி எறிந்த அம்ரீந்தர் சிங்..!

By vinoth kumarFirst Published Sep 18, 2021, 5:22 PM IST
Highlights

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியது. முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும் கட்சியின் மூத்த தலைவர் சித்துவுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியதை அடுத்து பஞ்சாப் மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து அம்ரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியது. முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும் கட்சியின் மூத்த தலைவர் சித்துவுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது. தொடர் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, முதல்வரின் எதிர்ப்பையும் மீறி ராகுல், பிரியங்கா ஆதரவுடன் கட்சியின் மாநிலத் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார்.

எனினும், முதல்வர் அமரீந்தரை தனிப்பட்ட முறையில் விமர்சித்த சித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் பிடிவாதமாக இருந்தனர். அமரீந்தருக்கு எதிராக சில அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர். தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடு விஸ்வரூபம் எடுப்பதால், முதல்வரை மாற்ற கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. இதற்காக இன்று மாலையில் சண்டிகரில் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற இருந்தது. இதற்கிடையே, அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், எம்எல்ஏ கூட்டத்திற்கு முன்பாகவே தனது முதல்வர் பதவியை அம்ரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து தனது ராஜினாமாவை கடிதத்தையும் அம்ரீந்தர் சிங் வழங்கினார்.  ராஜினாமா குறித்து கட்சி தலைவர் சோனியா காந்தியிடம் அமரீந்தர் சிங் பேசியதாகவும், அப்போது, இனியும் அவமானங்களைத் தாங்கிக் கொண்டு கட்சியில் நீடிக்க முடியாது என்று  திட்டவட்டமாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

click me!