
தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போலியோ சொட்டு மருத்து முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது குழந்தைகளுக்கு பொம்மை மற்றும் சாக்லேட் வழங்கி வாழ்த்தினார்
தமிழகத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெற்று வருகிறது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
சென்னை மாநகரில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 7.06 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு 1,640 சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் சென்னை கிரீன்வேய்ஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி போலியோ சொட்டு மருந்து முகாமினை தொடங்கி வைத்தார். அவர் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி அவர்களுக்கு இனிப்பு மற்றும் பொம்மைகள் வழங்கினார்.