ஜெ.வுக்கு களங்கம் ஏற்படுத்த முயல்கிறார் அம்ருதா! புகழேந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

First Published Nov 28, 2017, 3:18 PM IST
Highlights
Pugazhendhi accusations


ஜெயலலிதா தனது சகோதரி என்று சைலஜா கூறிவந்த நிலையில் தற்போது, தனது அம்மா ஜெயலலிதா என்று அம்ருதா கூறுவது ஏமாற்று வேலை என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த மஞ்சுளா (எ) அம்ருதா உச்சநிதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தான், ஜெயலலிதாவின் மகள் என்றும், இதனை நிரூபிப்பதற்கு எனக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் உடலைத் தோண்டி எடுத்து, டிஎன்ஏ சோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ள மஞ்சுளா, ஜெயலலிதாவின் உடலுக்கு வைஷ்ணவ ஐயங்கார் முறைப்படி இறுதிச்சடங்கு நடத்தப்படவில்லை என்பதால் வைஷ்ணவ ஐயங்கார் முறைப்படி அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அம்ருதா தனது மனுவில் கூறியிருந்தார்.

மேலும் அந்த மனுவில் 1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி ஜெயலலிதாவின் மகளாக பிறந்தேன். ஜெயலலிதாவின் அத்தை ஜெயலட்சுமி தான் பிரசவம் பார்த்தார். ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதற்காக இந்த உண்மை வெளிப்படுத்தப்படவில்லை என கூறியுள்ளார். எனது வளர்ப்பு தாயான ஜெயலலிதாவின் சகோதரி ஷைலஜா 2015 ஆம் ஆண்டு இறந்து விட்டார். வளர்ப்பு தந்தையான சாரதி இந்த ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி இறந்து விட்டார். இவ்வாறு அம்ருதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார் 

இந்த நிலையில் அம்ருதாவின் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அம்ருதாவின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அம்ருதாவின் மனுவை தள்ளுபடி செய்தனர். பெங்களூரு நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தனியார் தொலைக்காட்சிக்கு அம்ருதா பேட்டி அளித்தபோது, தன்னை மூடி மறைத்து எனது வளர்த்தார்கள் என்றும், ஜெயலலிதா தான் என்னுடைய அம்மா என்று உறவினர்கள் கூறியதால், வழக்கு தொடர்ந்ததாகவும் கூறியிருந்தார்.

அம்ருதா குறித்து டிடிவி தினகரனிடம் கேள்வி எழுப்பியபோது, உச்சநீதிமன்றமே அவரின் மனுவை தள்ளுபடி செய்துள்ள நிலையில் இது குறித்து ஏன் கேள்வி எழுப்புகிறீர்கள் என்றார். கர்நாடக மாநிலம் அதிமுக செயலாளர் புகழேந்தியிடம் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,  ஜெயலலிதா மகள் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அம்ருதா ஜெயலலிதாவின் மகள் கிடையாது என்றார்.

ஜெயலலிதாவை நாங்கள் மட்டுமல்ல. கோடானகோடி தொண்டர்களும், பொதுமக்களும் அவரை அம்மா... அம்மா... என்று பாசத்தோடு அழைக்கிறார்கள்.
தமிழக மக்கள் மீது நீங்கா இடம் பிடித்த அம்மா மீது களங்கம் ஏற்படுத்தவே அம்ருதா முயற்சிப்பதாக புகழேந்தி குற்றம் சாட்டினார்.

அம்ருதாவின் தாயார் சைலஜா, 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டுக்கு அடிக்கடி வந்து ஜெயலலிதா எனது சகோதரி என்று கூறி வந்தார். ஜெயலலிதாவின் சகோதரி என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்று அவரிடம் கேட்டபோது, உறவினர்கள் கூறியதாக அவர் கூறினார். மேலும் ஜெயலலிதாவுடன் எடுத்த ஒரு புகைப்படத்தையாவது ஆதாரமாக கொண்டு வாருங்கள் என்றபோது, இல்லை என்று சைலஜா கூறிவிட்டார். தற்போது அவர் இறந்த பிறகு அவரது மகள் அம்ருதா, ஜெயலலிதா எனது தாயார் என்கிறார். இது ஒரு ஏமாற்று வேலை என்று குற்றம் சாட்டுகிறார் புகழேந்தி.

click me!