
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என நேற்று ஆட்சி மன்றக்குழு அறிவித்ததையடுத்து, ராயப்பேட்டை தலைமை கழக அலுவலகத்தில் மதுசூதனன், தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட 20 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக.சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதற்காக அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதிமுக. தலைமை கழகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் அக்கட்சியின் ஆட்சிமன்ற குழுவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.
புதிய ஆட்சிமன்ற குழு கூடி ஆர்.கே.நகர் வேட்பாளரை தேர்வு செய்வது என்றும் இதற்காக போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது அதன்படி இன்று காலை அதிமுக.தலைமை கழகத்தில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட விரும்புபவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டன.
அதிமுக. அவைத் தலைவர் மதுசூதனன் இன்று காலை தலைமை கழகம் சென்று அங்கிருந்த நிர்வாகி மகாலிங்கத்திடம் விருப்ப மனு கொடுத்தார்.
இது போல் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர், தமிழ்மகன் உசேன். வட சென்னை மாவட்ட துணை செயலாளர் ஆர்.எம்.டி. ரவீந்திர ஜெயின், வடசென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஏ.ஏ.எஸ். முருகன், முன்னாள் மாவட்ட செயலாளர், ஆதிராஜாராம், முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர், கு.சம்பத் , முன்னாள் கவுன்சிலர் அஞ்சலட்சுமி உள்ளிட்ட 20 பேர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா அதிமுக அலுவலகத்தில் இருந்து விருப்பமனுவை பெற்றுச் சென்றுள்ளார் என்றும், அதை நிரப்பி தாக்கல் செய்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.