புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி தேர்தல்.. என்ஆர் காங்கிரஸ்-பாஜக இடையே மல்லுகட்டு.. தட்டிதூக்க காத்திருக்கும் திமுக!

By Asianet TamilFirst Published Sep 19, 2021, 8:59 PM IST
Highlights

புதுச்சேரியில் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி கட்சிகள் போட்டியிட போட்டா போட்டி ஏற்பட்டுள்ளதால், ஆளுங்கட்சி குழப்பத்தைப் பயன்படுத்தி தேர்தலில் திமுக களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 

புதுச்சேரியில் அக்டோபர் 4 அன்று மாநிலங்களவை எம்.பி. தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 22 அன்று நிறைவடைகிறது. புதுச்சேரியில் இத்தேர்தலில் யார் போட்டியிடுவது என்பதில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே போட்டாப்போட்டி ஏற்பட்டுள்ளது. பாஜகவுக்கு 6 எம்எல்ஏக்கள், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ஆதரவு உள்ளதால், தங்கள் நிறுத்தும் வேட்பாளருக்கு என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பாஜக தீர்மானம் நிறைவேற்றி முதல்வர் ரங்கசாமியிடம் வழங்கியுள்ளனர்.


சட்டப்பேரவையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால், முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை எம்.பி.யாக்க ரங்கசாமி விரும்புகிறார் இதனால், கூட்டணி கட்சிகளின் சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இதற்கிடையே முதல்வர் ரங்க்சாமியை சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரும் வேல்ஸ் கல்விக் குழுமத்தின் நிறுவனருமான ஐசரி கணேஷ் சந்தித்து பேசியதால், அவர் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் சிறகடிக்கின்றன. 
ஆளுங்கட்சிக் கூட்டணி இணைந்து வேட்பாளரை நிறுத்தினால், எளிதாக வெற்றி பெறும் நிலை உள்ளது. ஆனால், இதில் இழுபறி ஏற்பட்டுள்ளதால், ஆளுங்கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தைப் பயன்படுத்தி தேர்தலில் திமுக களம் இறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதுச்சேரி திமுக மேலிட பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர். 
திமுகவுக்கு 6 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 2 எம்.எல்.ஏ.க்களும் இருப்பதால், இக்கூட்டணிக்கு 8 பேர் ஆதரவு உள்ளது. எனவே, திமுகவும் தேர்தலில் குதிக்க ஆயத்தமாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. என்.ஆர்.கான்கிரஸ் - பாஜக இடையே வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏற்பட்டால், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

click me!