திடீர் திருப்பம்.. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக திடீர் பேச்சுவார்த்தை.. அம்பலப்படுத்திய பாஜக.!

By Asianet TamilFirst Published Sep 19, 2021, 8:01 PM IST
Highlights

திமுக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும் என்றால் பலமான கூட்டணி தேவை. அந்த வகையில் பாமக வந்தால் மகிழ்ச்சி என்று தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
 

தமிழகத்தில் காலியாக உள்ள ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துவிட்டது. அக்கூட்டணியில் உள்ள பாஜக, அதிமுகவுடன் இடங்கள் பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பங்கீடு தொடர்பாக அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், பாஜக தரப்பில் அக்கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் வேத சுப்பிரமணியன் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். 
பின்னர் கரு.நாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழக தலைமையாக அதிமுக உள்ளது. அக்கட்சியுடன் இணைந்து  செயல்படுவோம் என கட்சித் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பங்கீடு தொடர்பாக தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் தேர்தல் பொறுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பாஜக சார்பில் மாவட்டத்துக்கு 2 பார்வையாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்துக்கு நானும், கராத்தே தியாகராஜனும் நியமிக்கப்பட்டுள்ளோம். செங்கல்பட்டு மாவட்ட பங்கீடுக்காக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், காமராஜ் ஆகியோருடன் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் பாஜக தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். தனித்து போட்டி என அறிவித்த பாமக, அதிமுக கூட்டணியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பட்டியலை வழங்கியுள்ளது. மாவட்டத்துக்கு மாவட்டம் பாமகவின் நிலைபாடு மாறுகிறது. எங்களைப் பொறுத்தவரை திமுகவை தோற்கடிக்க வேண்டும். இதற்கு மீண்டும் கூட்டணிக்கு பாமக வந்தால் மகிழ்ச்சியடைவோம். 

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - திமுக கூட்டணி இடையே  3 சதவீதம் மட்டுமே வாக்கு வித்தியாசம் இருந்தது. திமுக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும் என்றால் பலமான கூட்டணி தேவை. அந்த வகையில் பாமக வந்தால் மகிழ்ச்சி” என்று கரு.நாகராஜன் தெரிவித்தார்.
 

click me!