பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் தேர்வு.. காங்கிரஸ் தலைமை அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Sep 19, 2021, 7:28 PM IST
Highlights

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் பஞ்சாப் மாநில காங்கிரசில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியது. முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

சண்டிகரில் நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சரண்ஜித் சிங் பஞ்சாப்பின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்படுவதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் அறிவித்துள்ளார். 

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் பஞ்சாப் மாநில காங்கிரசில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியது. முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் தனித்தனியாக கட்சி மேலிடத்தை சந்தித்து முறையிட்டனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண, சித்துவுக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே இதற்கு அமரீந்தர் சிங் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சித்து மாநில காங்கிரஸ் தலைவரான பிறகுதான் பிரச்சனை மேலும் விஸ்வரூபம் எடுத்தது. சித்து கட்சியில் தனக்கான ஆதரவாளர்களை திரட்டி, அமரீந்தருக்கு எதிராக வெளிப்படையாக பேசினார். 

கட்சிக்குள் சித்துவுக்கு பலமான ஆதரவு இருந்த நிலையில், அமரீந்தர் சிங் தலைமையிலான அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், அவரது ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாகவும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் காங்கிரஸ் தலைவர் சோனிகாந்தியிடம் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், இனிமேலும் என்னால் அவமானத்தை தாங்க முடியாது என்று கூறி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமரீந்தர் சிங்;- நான் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். இனி அவர்களுக்கு யார் மீது நம்பிக்கை இருக்கிறதோ அவரை முதல்வராக தேர்வு செய்து கொள்ளட்டும் என்றார். 

மேலும், சித்துவுக்கு பாகிஸ்தானுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவரை பஞ்சாப் முதல்வராக்கினால் கடுமையாக  எதிர்ப்பேன். அவர் இந்த பதவிக்கு தகுதியவற்றவர். அவரால் காங்கிரஸ் கட்சி அழிவது உறுதி என்றார். இதனையடுத்து, பஞ்சாப்பின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து  கட்சி மேலிடம் தீவிர ஆலோசனை நடத்தியது. முதல்வர் பதவிக்கு சுனில் ஜாகர், அம்பிகா சோனி, பிரதாப் சிங் பஜ்வா, சித்து ஆகிய 4 பெயர்கள் முன்வைக்கப்பட்டன. 

இந்நிலையில், சண்டிகரில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், யாரும் எதிர்பாராத விதமாக புதிய முதலமைச்சராக சரண் ஜித் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் அம்ரீந்தர்சிங் அமைச்சரவையில், ஏற்கனவே தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது.

click me!