அதிருப்தியில் புதுச்சேரி அதிமுக... பாஜக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு தெரியுமா?

By Kanimozhi PannerselvamFirst Published Mar 10, 2021, 11:28 AM IST
Highlights

என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியும், பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

புதுச்சேரியில் பாஜக - அதிமுக கூட்டணியுடன் என்.ஆர்.காங்கிரஸ் இணையுமா? என்பதில் பெரும் குழப்பம் நிலவி வந்தது. இதனால் கட்சி நிர்வாகிகளுடன் ரங்கசாமி பல கட்ட ஆலோசனைகளை நடத்தி வந்தார். அந்த கூட்டத்தில் பெரும்பாலானோர் தனித்து போட்டியிடலாம் என கூறிய போதும், பாஜகவுடன் இணைவதே வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்பதால் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைவதை ரங்கசாமி உறுதி செய்தார். 

என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, அதிமுக கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ ஆகியோர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் பாஜக, அதிமுக கட்சிகள் வரும் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜக, அதிமுகவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், தொகுதிகள் ஒதுக்கீடு விரைவில் செய்யப்படும். 3 கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்கும். பாமக இதில் இடம்பெறவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் எம்எல்ஏக்கள் முதல்வரைத் தேர்வு செய்வார்கள் என்று தெரிவித்தனர். 

என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியும், பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். தொகுதிகள் எத்தனை என்பது தொடர்பாக ஒதுக்கீடு செய்யப்படாததால், அதிமுக கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார். இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இன்று புதுச்சேரியில் பாஜக தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் பேசிய புதுச்சேரி பாஜக மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, 10 இடங்களில் பாஜகவும், 4 இடங்களில் அதிமுகவும் போட்டியிடும் என அறிவித்தார். மேலும் 14 தொகுதிகளிலும் வெற்றி பெற தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். ஏற்கனவே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு இல்லாமல் இருந்த அதிமுக, 4 தொகுதிகள் மட்டுமே தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


 

click me!