அப்போதே திமுகவை சவுக்கால் அடித்திருந்தால் இந்தளவிற்கு பொய் பேச மாட்டார்கள். எக்கசக்க கோபத்தில் பொன்.ஆர்.

By Ezhilarasan BabuFirst Published Mar 10, 2021, 11:15 AM IST
Highlights

இது கடந்த கால அனுபவம். 67 ல் ரூபாய்க்கு 3 படி அரிசி தரவில்லை எனில் முச்சந்தியில் வைத்து அடியுங்கள் என திமுகவினர் வாக்குறுதி கொடுத்தார்கள். அன்னைக்கு மக்கள் சவுக்கு எடுத்து அடித்திருந்தால் இன்று இது மாதிரி திமுகவினர் பொய்யான வாக்குறுதி கொடுக்க மாட்டார்கள்.

அதிமுக - பாஜக கூட்டணி தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சியில் அமரும் எனவும், ஸ்டாலின் இப்போது கொடுத்திருக்கும் ஏழு திட்டங்களும் ஏமாற்று திட்டங்கள் தான் எனவும், திமுகவால் எதையும் செய்ய முடியாது, கடந்த 1967 ல் தொடங்கி மக்களை ஏமாற்றியே ஆட்சியைக் கைப்பற்றுவதுதான் திமுகவின் வழக்கம் என பாஜக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்த தமிழக பாஜக தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறியதாவது: அதிமுக - பாஜக கூட்டணி வருகிற தமிழக சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தங்களுக்கு தொல்லை தராத அரசாங்கம் மீண்டும் வரவேண்டும் என்பது தமிழக மக்களின் விருப்பமாக இருக்கிறது. அந்த வகையில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சியில் அமரும். பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், தேமுதிக, அதிமுக - பாஜக கூட்டணியில் தொடர விருப்பம் தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதிலிளித்த அவர், முறைப்படி வைக்க வேண்டிய வேண்டுகோள்தான், அதில் எந்த தவறும் இல்லை என்றார்.  

மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் மாதந்தோறும் 1500 ரூபாய் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கு தருவோம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததை ஸ்டாலின் சாத்தியப்படாது என்று கூறியுள்ளது குறித்தக் கேள்விக்கு பதிலளித்த அவர், திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கை கொடுத்து இருக்கிற நிலையில், முதல்வர் அறிவிப்பை விமர்சிப்பது எந்த வகையில் சரி எனத் தெரியவில்லை. அவரது அறிக்கை சாத்தியப்படும் என ஸ்டாலின் சொல்லும் போது, முதல்வர் அறிக்கை மட்டும் சாத்தியப் படாதா? 

67 ல் தொடங்கி  மக்களை ஏமாற்றியே ஆட்சியைக் கைப்பற்றுவதுதான் திமுகவின் வழக்கம். ஸ்டாலின் இப்போது கொடுத்து இருக்கும் ஏழு திட்டங்களும் ஏமாற்று திட்டங்கள் தான். திமுகவால் எதையும் செய்ய முடியாது. அதிமுக அறிவிக்கும் திட்டங்களை அதிமுக செய்ய முடியும். திமுக அறிவிக்கும் திட்டங்களை திமுக செய்ய முடியாது. ஆத்மார்த்தமான விஷயங்கள் மனதில் இருந்து வர வேண்டும். ஸ்டாலின் கூறுவது உதட்டில் இருந்து வரும் விஷயங்கள். தேர்தலை மனதில் வைத்து தான் இது வரும். இது கடந்த கால அனுபவம். 67 ல் ரூபாய்க்கு 3 படி அரிசி தரவில்லை எனில் முச்சந்தியில் வைத்து அடியுங்கள் என திமுகவினர் வாக்குறுதி கொடுத்தார்கள். அன்னைக்கு மக்கள் சவுக்கு எடுத்து அடித்திருந்தால் இன்று இது மாதிரி திமுகவினர் பொய்யான வாக்குறுதி கொடுக்க மாட்டார்கள். 

4 முறை முதல்வராக இருந்தவர் 5வது முறை முதலமைச்சராக வர, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 ஏக்கர் நிலம் தருவோம் என வாக்குறுதி தந்தார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு இவ்வளவு நிலம் இல்லை என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டோம் என்றார். அப்போது ஆட்சிக்கு வந்த திமுக முதல்வர், தேர்தல் வாக்குறுதி கொடுக்கும் போதே கேரளா, கர்நாடகா, ஆந்திரா அனைத்தும் சேர்ந்தது தான் தமிழகம் என நினைத்து திமுகவினர் வாக்குறுதி கொடுக்கிறார்கள். எல்லாம் பொய்யான விஷயம். அது போல் ஸ்டாலின் இப்போது கொடுக்கும் வாக்குறுதியும் பொய்யானது என்றார். 

பாஜக வேட்பாளர் பட்டியல் குறித்தக் கேள்விக்கு, தொகுதி விஷயங்கள் முடிந்த பிறகு, வேட்பாளர் பட்டியல் வரும். நிச்சயம் மோடி தமிழகத்திற்குப் பிரச்சாரத்திற்கு வருவார். தேமுதிக தங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறியதால் பாஜக அதிக தொகுதி எதிர்ப்பார்க்குமா? என்ற கேள்விக்கு, அது எல்லாம் பேசக்கூடிய நேரம் இது கிடையாது. அண்ணன் எப்ப சாவான்? திண்ணை எப்பக் காலியாகும் என்பது போல உங்க கேள்வி இருக்கிறது. கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பாஜக உறுதியாக வெற்றி பெறும். இவ்வாறு இவ்வாறு அவர் கூறினார். 
 

click me!