
கடந்த 5ம் தேதி முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர், அதிமுக பொது செயலாளர் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இதையொட்டி, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதையடுத்து அனைத்து எம்எல்ஏக்களையும் சொகுசு பஸ்களில் ஏற்றி கொண்டு சென்றனர்.
அவர்களை காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோல்டன் பே எனப்படும் தனியார் விடுதியில் அடைக்கப்பட்டதாக பேசப்படுகிறது.
இதை தொடர்ந்து சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பல எம்எல்ஏக்கள், எம்பிக்கள், ஒ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். புதுவையில் அதிமுக நிர்வாகி ஓம்சக்தி சேகர், ஒ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால், புதுச்சேரி மாநில அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன்னாள் அமைச்சர் பொன்னுசாமியும், இன்று கிருஷ்ணகிரி எம்பி அசோக்குமார், நாமக்கல் எம்பி பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், சசிகலா தரப்பினர் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இதைதொடர்ந்து புதுச்சேரி சட்டமன்ற குழுத் தலைவர் அன்பழகன், அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சசிகலா, ஓ.பி.எஸ். இருவரில் யாருக்கு ஆதரவளிப்பது என அன்பழகன், எம்எல்ஏக்களுடன் தீவிரமாக பேசி வருகிறார். தற்போது, அன்பழகன் உள்பட புதுச்சேரி அதிமுகவில் 4 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.