Pongal Gift : ரோட்டுல போயிதான் பொங்கலை வைக்கணும்.. தரமற்ற பொங்கல் பரிசால் ..பொதுமக்கள் ஆவேசம்..

By Raghupati RFirst Published Jan 19, 2022, 11:10 AM IST
Highlights

தமிழக அரசு விநியோகிக்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்கள் இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்புடன் கூடிய 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுவதை நேரடியாகச் சென்று நியாயவிலைக் கடைகளில் ஆய்வு செய்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.   

அதேபோல் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கும் பணிகளை, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணித்து அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசுப் பொருள்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

 தரமற்ற பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதாக பல்வேறு இடங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னதாக திருப்பத்தூர் கந்திலி அருகே மோட்டூர் ஊராட்சிக்குட்பட்ட நியாயவிலை கடையில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு தரம் இல்லை எனக் கூறி சாலையில் வீசி எறிந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. மோட்டூர் ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளை கொண்டிருக்கும் கடை எண் c2513 ல் இன்று பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கப்பட்டது.

இந்த தொகுப்பில் மிளகு கொட்டைக்கு பதிலாக பருத்திக் கொட்டையும், மஞ்சள் தூள் வீட்டிற்கு வெளியே போடும் கோலமாவு போல் உள்ளது எனவும் ரேஷன் அரிசியை அரைத்து ரவையாக கொடுத்திருப்பதாகவும் குற்றம்சாட்டினர். இதனால் தரமற்ற பொருள் வழங்கப்பட்டதால் விரக்தி அடைந்த பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்புகளை பிரித்து சாலையில் கொட்டி வீசி ஆதங்கத்தை தெரிவித்தனர்.

 

Public show their anger by throwing Pongal package items in the streets.

pic.twitter.com/GqZh462vm3

— G Pradeep (@pradeep_gee)

மேலும் இது போன்ற ஒரு சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது.  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறை ஊராட்சி மேலக்கடைதெரு ரேசன் கடையில் காலதாமதமாக பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டதை கண்டித்தும், பொருட்கள் அனைத்தும் பழைய பொருட்களாக இருப்பதாகவும், பூச்சி போன்றவைகள் உள்ள பொருட்களை எப்படி பயன்படுத்த முடியும் என்றும் கேள்வி எழுப்பிய அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை -கும்பகோணம் பிரதான சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக குத்தாலம் போலீசார், குத்தாலம் வட்டவழங்கல்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

click me!