நாட்டின் 45 % பணம் 10 % பணக்காரர்களிடம் குவிந்துள்ளது .. வெளியானது பகீர் ரிப்போர்ட்.

By Ezhilarasan BabuFirst Published Jan 19, 2022, 11:02 AM IST
Highlights

இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கொரோனா தொற்றின் போது 39 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 102 இலிருந்து 142 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான இடைவெளி பன்மடங்கு அதிகரித்துள்ளது. கொரோனா காலத்தில் நாட்டில் 84% குடும்பங்களில் வருமானம் குறைந்துள்ளது. ஆனால் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையோ 102 லிருந்து 142 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தோற்றால் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் என ஏழைகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில் பணக்காரர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

உலகப் பொருளாதார அமைப்பின் மாநாடு ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் டவோசில்  நடந்தது. இதில் கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்தும் அதனால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் ஆக்ஸ்பாம் இந்திய அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,  இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கொரோனா தொற்றின் போது 39 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 102 இலிருந்து 142 ஆக உயர்ந்துள்ளது. அதாவது கொரோனா காலத்தில் இந்திய பில்லினியர்களின் மொத்த சொத்து இரட்டிப்பாகி உள்ளது. இந்த டாப் 10 பணக்காரர்களிடம் உள்ள பணத்தை வைத்து அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் உயர் கல்வி நிறுவனங்களை நடத்த முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால் இதன்மூலம் அவர்களிடம் உள்ள செல்வம் எவ்வளவு இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்றால் சமூக ஏற்றத்தாழ்வுகள் மிகவும் அதிகரித்துள்ளது. நாட்டிலுள்ள மொத்த செல்வத்தில் 45% சொத்து 10 சதவீத பணக்காரர்களிடம் உள்ளது. அதேபோல் நாட்டில் ஏழை மக்களிடம் வெறும் 6% செல்வம் மட்டுமே உள்ளது. இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் 10 சதவீதம் பேருக்கு 1 சதவீத கூடுதல் வரி விதித்தால் 17.7 லட்சம் கூடுதல் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. முதல் 98 பணக்காரர்களுக்கு 1 சதவீதம் வரி விதித்தால் ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவ சுகாதார திட்டத்தை அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு தங்குதடையின்றி செயல்படுத்த முடியும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 142 பணக்காரர்களில் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு என்பது 53 லட்சம் கோடியாக உள்ளது. அதாவது 55.5 கோடி பேரிடம் உள்ள சொத்துக்கு இணையான சொத்துகள் 98 கோடீஸ்வரர்களிடம் உள்ளது. இந்தியாவில் டாப் 10 பணக்காரர்களிடம் உள்ள பணத்தை நாளொன்றுக்கு 7.4 கோடி என செலவு செய்தாலும் 84 ஆண்டுகளுக்கு அதை செலவழிக்கலாம் என அறிக்கை தெரிவிக்கிறது.

மறுபுறம் இந்த பணக்காரர்கள் மீது சொத்து வரி விதிக்கப்பட்டால் 78.3 டாலர்  அதாவது 5.8 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க முடியும் என்றும், இந்த பணத்தின் மூலம் அரசின் சுகாதார பட்ஜெட் 271 சதவீதம் அதிகரிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதேபோல் கொரோனா காலத்தில் 22 சதவீதம் பெண்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர், 2021 பட்ஜெட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அரசாங்கம் இவ்வளவு குறைந்த தொகையை மட்டுமே செலவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இது இந்தியாவின் கடைசி 10 மில்லினியர்களின் மொத்த சொத்துக்களில் பாதிகூட இல்லை என கூறப்படுகிறது. ஆக்ஸ்பாம் அறிக்கையின்படி கல்விக்கான அரசாங்கத்தின் பட்ஜெட் ஒதுக்கீடு 6 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு மொத்த யூனியன் பட்ஜெட்டில் 1.5%  இருந்து 0.6 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது சுகாதாரம், கல்வி மற்றும் சமூக பாதுகாப்பு துறையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளே இந்தியாவில் பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையேயான இடைவெளி அதிகரிக்க செய்துள்ளது மொத்தத்தில் கல்வி சுகாதாரத்தில் தனியார் பங்களிப்பை குறைத்து அரசின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதை குறைக்க அதிகப்படியான வரிகளுக்கு விதிக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
 

click me!