
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் அவர்களின் பிரச்சனை தீரும் வரை தொடரும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதையடுத்து இன்று மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்கிறது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு ஐகோர்ட்டு தடைவிதித்துள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சி.ஐ.டியு. அலுவலகத்தில் போக்குவரத்து கழகங்களில் செயல்படும் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்பட 17 தொழிற்சங்கங்கள் அடங்கிய அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சி.ஐ. டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் , தொழிலாளர்களின் முக்கிய பிரதிநிதிகளாக இருக்கக்கூடிய தொழிற்சங்கத்தை சேர்ந்த யாரையும் கலந்து பேசாமல் ஒருதலைபட்சமாக எடுக்கப்பட்ட முடிவாக ஐகோர்ட்டு தீர்ப்பை தாங்கள் கருதுகிறோம் என தெரிவித்தார்..
நீதிமன்றத்தில் இருந்து தாக்கீதுகள் வருமானால், அதை சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வதற்கு தயார்நிலையில் இருக்கிறோம். எங்களுடைய பிரச்சினைகள் தீரும்வரை வேலைநிறுத்தம் தொடரும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையடுத்து இன்று மூன்றாவது நாளாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை.
தேனி, கம்பம், பெரியகுளம் ஆகிய பகுதிகளில் அரசுப் பேருந்துகள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை. ஒரு சில இடங்களில் தற்காலிக பணியாளர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகள் முழுமையாக இயக்கப்படாததால் பொதுமக்களும், பயணிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். தற்போது இயக்கப்பட்டு வரும் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.