
தங்கச்சிக்கு பர்த்டேன்னா அண்ணன் கேக் வாங்கிட்டு வந்து, சர்ப்பரைஸிங் கிஃப்டோட செலிபிரேட் பண்ணுனா அது சாதாரண குடும்பம்! ஆனா பிறந்தநாள் கொண்டாடும் தங்கச்சிக்கு மஞ்சள் சால்வை போட்டு மகிழ்ந்துட்டு, அவங்க வீட்டு முன்னாடி போஸ்டர் ஒட்டுன பயபுள்ளைகளை பத்தி கணக்கெடுத்து வெச்சால் அது கருணாநிதி குடும்பம்.
ஆம்! இன்று கனிமொழிக்கு பிறந்தநாள். இதுவரையில் எத்தனையோ பிறந்தநாட்களை கடந்து வந்திருந்தாலும் கூட இந்த பிறந்தநாள அவருக்கு மிக முக்கியமானது. காரணம்?....2ஜி வழக்கிலிருது விடுதலையாகி திகட்டத் திகட்ட சந்தோஷத்துடன் நின்று கொண்டிருப்பதுதான்.
பிறந்தநாளை முன்னிட்டு அண்ணன் ஸ்டாலினிடம் சால்வை போர்த்தப்பட்டு ஆசியும், அண்ணி துர்கா ஸ்டாலின் கைகளால் ஸ்வீட்டும் வாங்கித் தித்தித்துக் கொண்டார் கனி.
ஸ்டாலினுக்கும் மகிழ்ச்சிதான்! அன்புத் தங்கையல்லவா. அதிலும் விமர்சனக் கடலோடு போய்விட இருந்த கட்சியை, தீர்ப்பில் கிடைத்த வெற்றியின் மூலம் கரைநோக்கி இழுத்து வந்திருக்கும் தங்கையாயிற்றே! அதனால் பாசமாகத்தான் வாழ்த்தி இருந்தார்.
ஆனாலும் அவரது கட்சியினர் செய்த சில குறும்புத்தனங்கள் தான் பிறந்த நாள் மகிழ்ச்சியை தாண்டியும் தங்கை மீது ஒரு எச்சரிக்கை கண் வைக்கும் நிலையை ஏற்படுத்திவிட்டது.
காரணம்?...கனிமொழியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரது வீட்டில் வழக்கத்தை விட மிக அதிகமாக தொண்டர்கள், நிர்வாகிகள் ஆஜராகி வாழ்த்து மழை பொழிந்தனர். அது மட்டுமில்லாமல் அவரது வீட்டைச் சுற்றி மெகா சைஸ் போஸ்டர்கள் வேறு ஒட்டித்தள்ளி ஓவர் சீன் செய்துவிட்டனர்.
’மாதர்குல மாணிக்கமே! திராவிட தென்றலே!, சமூக பாதுகாவலரே!’ என கனிமொழியை பெருமை கனத்த வார்த்தைகளில் விளித்து பாராட்டு மழை பொழிந்திருக்கின்றனர். இது போக வீர முத்தரையர் பேரவை! தி இந்து யூனியன் தொழிலாளர் சங்கம்! என வேறு சில அமைப்புகளும் பேனர் கட்டி பட்டாசு கிளப்பிவிட்டனர்.
பிறந்தநாள் கொண்டாட்ட தினமான இன்று கனிமொழியை சந்திக்க வரும் நிர்வாகிகள் யார், யார்? என்னென்ன மாதிரியான கோஷங்கள் அங்கே எழுப்பப்படுகின்றன? என்பதெல்லாமே ஸ்டாலினின் கவனத்துக்கு போட்டோவாகவே பகிரப்பட்டதாம்.
கருணாநிதி ஆக்டீவாக இருக்கும் போதே ஸ்டாலினோடு உரசல்போக்கை கடைப்பிடித்த சென்னை மேற்கு மாவட்ட செயலாளரான ஜெ.அன்பழகன், தனது பரிவார நபர்களுடன் கனிமொழியை அதீதமாக வாழ்த்தி வணங்கியதாக ஸ்டாலினுக்கு தகவல் போயிருக்கிறதாம்.