கேரள அரசை பாராட்டியது கமலின் வடிகட்டிய சுயநலம்! பாராட்டை திரும்ப பெற சொல்லி போர்க்கொடி...

Asianet News Tamil  
Published : May 25, 2017, 08:43 AM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
கேரள அரசை பாராட்டியது கமலின் வடிகட்டிய சுயநலம்! பாராட்டை திரும்ப பெற சொல்லி போர்க்கொடி...

சுருக்கம்

Protest Against Kamalhasan Appreciated the Government of Kerala

கேரள அரசை பாராட்டியது கமலின் வடிகட்டிய சுயநலம்! பாராட்டை திரும்ப பெற சொல்லி போர்க்கொடி.

தமிழகத்தின் சுமார் ஏழு மாவட்டங்கள் தரிசாகும் காரியத்தை செய்திருக்கும் கேரள முதல்வரை சொந்த திருப்திக்காக கமல்ஹாசன் பாராட்டியிருக்கும் செயல் மிக கடுமையான விமர்சனத்துக்கு ஆளாக துவங்கியிருக்கிறது. 
கேரளாவை ஆளும் பினராயி விஜயனின் ஆட்சி ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. இந்நிலையில் அந்த அரசை  ‘இடது சாரி அரசு நல்லாட்சி அளித்து வருகிறது.’ என்று பாராட்டியுள்ளார் கமல். அதுமட்டுமில்லாமல் ‘ஓராண்டாக நல்லாட்சி அளித்து வருவதற்கு மனமார்ந்த பாராட்டுகள். பல துறைகளில் கேரள அரசு சிறந்து விளங்குகிறது. இந்த விஷயத்தில் அண்டை மாநிலங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக கேரளா திகழும் என நம்புகிறேன்.’ என்று தான் அனுப்பியிருக்கும் வாழ்த்து இமெயிலில் குறிப்பிட்டுள்ளார். 

நடிப்பில் உலக நாயகன் மட்டுமில்லை, உலக அறிவில் ஞானியாக பார்க்கப்படும் கமலிடமிருந்து இப்படியொரு வாழ்த்து ஆச்சரியத்தோடு அதிர்ச்சியும் தந்திருக்கிறது தேசிய அரசியல் விமர்சகர்களுக்கு. இதை தொட்டு கமலை புரட்டிப்போட்டு கேள்விகள் கேட்க துவங்கியுள்ளனர். பினராயி அரசுக்கு கமல் அனுப்பியிருக்கும் இந்த பாராட்டு கடைந்தெடுத்த சுயநலன் மட்டுமல்ல தன் சொந்த பூமியான தமிழ் மண்ணின் நலனை அடகு வைத்து அனுப்பப்பட்ட வாழ்த்து இது என்கிறார்கள்.
ஏன் இப்படியொரு விமர்சனம்?

‘’கேரளா ஓராண்டை நிறைவு செய்வதற்கு ஒரு தினம் முன்னதாகதான் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசும் ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. ஆனால் ஜெயலலிதா இருந்த காலத்தில் இருந்தே அக்கட்சியுடன், ஆட்சியுடன் கமலுக்கிருந்த மோதல் காரணமாக எந்த ரியாக்‌ஷனையும் கமல் காட்டவில்லை. விஸ்வரூபம் படம் வெளியாவதில் வந்த சிக்கல், சென்னையை வெள்ளம் புரட்டிப்போட்ட போது மக்கள் பணிகளை அரசு சரிவர நிறைவேற்றவில்லை என்று கமல் குத்திக் காண்பிக்க அதற்கு பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய தலைகள் அவர் மீது பாய்ந்தனர். இதில் ஜெ.வுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. 

ஆக இந்த விஷயங்களால் அ.தி.மு.க. அரசிடமிருந்து புரிதல் ரீதியில் வெகுவாக விலகி நின்றார் கமல். ஜெ.,வின் இறப்புக்கு இறுதி அஞ்சலி செலுத்தவும் வரவில்லை, அதன் பிறகான அரசியல் நிகழ்வுகளை வழக்கமான தனது குழப்ப வார்த்தைகள் மூலம் நைய்ய புடைத்து எடுத்து வந்தார். 

இந்நிலையில்தான் திடுதிப்பென பினராயியை வாழ்த்தியிருக்கிறார். பினராயியை கமல் வாழ்த்த முக்கிய காரணம் ஒன்ரு உண்டு. அதாவது கமலுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டபோது அதை ஜெ., தலைமையிலான தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால் பினராயி வாழ்த்தினார். 

இதற்கு பிரதி நன்றியைதான் இப்படி காட்டியிருக்கிறார் கமல். சரி தன் திறமையை அங்கீகரித்த அண்டை மாநில முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வாழ்த்தியதில் தவறில்லைதான். ஆனால் தமிழக நலனுக்கு பெரும் குடைச்சல் தரும் கேரள அரசை ‘நல்லாட்சி புரிகிறீர்கள், அண்டை மாநிலங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக செயல்படுகிறீர்கள்.” என்று கமல் சொல்லியிருப்பதுதான் அபத்தம். 

துல்லியமாக பார்ப்பதானால் கடந்த முறை நடந்த அரசுகளை விட பினராயி அரசு எந்தவிதத்திலும் பெரிய மாறுதல்களை அம்மாநிலத்தில் கொண்டு வந்துவிடவில்லை. பா.ஜ.க.வினர் மீது தொடரும் தாக்குதல், பெண்களுக்கு எதிரான கோரமான பாலியல் தொந்தரவுகள், சொந்த மாநிலத்தில் மேல் படிப்புக்கு வாய்ப்பில்லாமல் தமிழகம் நோக்கி படையெடுக்கும் கேரள இளைஞர்கள், வேலை வாய்ப்பின்மையால் பல மாநிலங்களிலுக்கு இட நகர்வு  என்று அதே அவல காட்சிகள் தொடர்கிறது. அதிலும் பெண்களுக்கு எதிரான  பாலியல் குற்றங்கள் பெருகியிருக்கிறது என்றே அங்கிருக்கும் என்.ஜி.ஓ.க்கள் குற்றம் சாட்டுகின்றன. பாவனா கடத்தப்பட்டது உட்பட பல உதாரணங்களை முன்வைக்கின்றன என்.ஜி.ஓ.க்கள். 

அதேநேரத்தில் தமிழகத்துக்கு நீர் பகிர்வு ரீதியில் பெரும் குடைச்சல்களை கொடுத்து வருகிறது. பினராயி அரசு. தமிழத்துக்கு சொந்தமான பவானி ஆறு கேரளாவுக்குள் நுழைந்து பின் மீண்டும் தமிழகத்திறு வருகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கேரளாவில் மூன்று தடுப்பணைகளை கட்டி தமிழர்களின் விவசாயத்திலும், வாழ்விலும் அடித்திருக்கிறார் பினராயி. தமிழகத்தில் காவிரியோடு கலந்து விஸ்வரூபமெடுக்க வேண்டிய பவானி கேரளாவில் பெருமளவு தடுத்து நிறுத்தப்படுவதால் காவிரியில் நீரின் அளவு பெருமளவில் குறைகிறது. 

கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட சுமார் ஏழு மாவட்ட மக்களின் நீராதாரத்திற்கு வேட்டு வைத்திருக்கும் பினராயி அரசை, மக்கள் நலன் தொடர்பான பல துறை சிறப்பில் ‘அண்டை மாநிலங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக கேரளா திகழும் என நம்புகிறேன்.’ என்று கமல் பெருமிதப்பட்டுள்ளது பெரும் அபத்தம். 

சுய நலனுக்காக தமிழர் நலனை அடகு வைத்து வெளியிட்டிருக்கும் பாராட்டை கமல் உடனடியாக திரும்ப பெறவேண்டும்.” என்று குமுறி கொட்டியுள்ளனர். 

நீங்க சுயநலவாதின்னு நாங்க சொல்லலை கமல்! ஆனால் சுயநலமில்லாமல் இருந்தால் நல்லா இருக்குமுன்னுதான் சொல்றோம். 

 

PREV
click me!

Recommended Stories

எரியும் கடல்... எகிறும் கச்சா எண்ணெய்..! ஈரானின் போரால் உலகிற்கு ஆப்பு? - காப்பாற்றப் போகும் கருப்பு தங்க புதையல்..!
பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்க ஊழியர்களின் வயிற்றில் அடிக்கும் மாடல் அரசு: 20 மாத ஏமாற்றம்..!