என் மரண புதிருக்கான விடையை நான் சொல்வதா?ஜெ.,வின் ஆன்மா கடிதம் எழுதினால்!...

First Published May 24, 2017, 7:52 PM IST
Highlights
Jayalalithaa wrote Should I tell the answer to my death


சின்னம்மா சசிகலா கூடிய விரைவில் தொண்டர்களுக்கு கடிதம் எழுதுவாரென்று கருணாஸ் சொல்லியுள்ளார். இதையடுத்து அ.தி.மு.க. வட்டாரம் ஆர்வ பரபரப்புக்கு தாவியுள்ளது. சிறையிலிருந்து சசி எழுதும் கடிதமே ஹிட்டாகுமென்றால், மெரீனாவில் சந்தன பேழைக்குள் இருந்து ஜெயலலிதாவின் ஆத்மா சசி உள்ளிட்ட தன் கட்சியினருக்கு கடிதம் எழுதினால் அது எப்படி அதிரிபுதிரியாய் வெடிக்கும்?!
இனி ஜெ., எழுதும் மடல்...

சகோதரி சசிக்கும், என் உயிரினும் மேலான ரத்தத்தின் ரத்தங்களுக்கும்,
நலம் பகிர்ந்து கொள்ளும் நிலை கடந்தவளாக நான் இருக்கிறேன். நானில்லாத நிலை வந்தால் கழக நிர்வாகிகளாகிகள் நலமாக இருக்க மாட்டீர்கள் என்று நான் அஞ்சிய காலமன்று ஒன்று உண்டு. ஆனால் அப்பல்லோ நாட்களில் ஐ.சி.யு.விற்கு வெளியே வலம் வந்த எனது மனசாட்சி கண்ட காட்சிகளும், காது கொடுத்த விஷயங்களும் என் எண்ணத்தை அடியோடு புரட்டிப் போட்டுவிட்டன. அதிலும் எனது இறுதி நாட்கள் நெருங்கிய நிலையில் நடத்தப்பட்ட அரசியல் காய்நகர்த்தல்கள் அம்மம்மா! இரும்புப் பெண்மணி என்று பட்டம் வாங்கிய என்னையே கதிகலங்க வைத்துவிட்டன. மரணம் தந்த வலியை விட என்  மனசாட்சி தந்த வலிகள்தான் என்னை துடிக்க வைத்துவிட்டன.

ஆனால் என் தூய தொண்டர்களை நினைக்கையில்தான் உயிரற்ற என் உடலுக்கே இப்பவும் தொண்டை அடைக்கிறது. ’அம்மா’ என்பது எனது அரசியல் அடையாளம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன் ஆனால் தன்னை பெற்ற தாயையே பெற்றவள் போல் என் தொண்டர்கள் என்னை கொண்டாடியதை ராஜாஜி ஹாலில் பூத உடலாக கிடத்தப்பட்டிருந்த போதுதான் புரிந்து கொண்டேன். 

இந்த கடித வாயிலாக தொண்டர்கள் என்னிடம் எதிர்ப்பார்க்கும் முக்கியமான விளக்கம் என்னவென்று எனக்கு தெரியும். ஆம்! என் மரணம் குறித்த புதிர்களுக்கான விடையை என்னை விட வேறு யார் துல்லியமாக எழுதிவிட முடியும்? ஆனால் உலக தமிழர்களை போல நானும் கைகட்டி காத்திருக்கிறேன், என்னைப்போலவே அந்த விடையை அறிந்த இதயங்கள் அதை எந்த வடிவத்தில் வெளியிடுகின்றன என்று பொறுத்திருந்து பார்ப்போம். புதிர் போடுவது உங்கள் அம்மாவுக்கு பிடித்த விளையாட்டு என்பது உங்களுக்கும் தெரியும்தானே! 

கழக நிர்வாகிகளே, மரணத்துக்கு பின்னும் ஒரு ஆத்மாவுக்கு வலி தர முடியுமென்றால் அது உங்களால் மட்டுமே முடியும். பெரும் சாதனையை சாதித்து விட்டீர்கள். இந்திய ராணுவத்துக்கு நிகராக கட்டுக் குழையாமல் கட்சி நடத்துவதாக பெயர் எடுத்த என் இயக்கம் இன்று சந்தி சிரிக்கிறதே. இதுதானா உங்கள் நன்றியுணர்வு? இதுதானா உங்கள் விசுவாசம்? இதுதானா உங்கள் கழக பக்தி? 

மீளா துயிலுக்காக மூடப்பட்ட படுக்கைக்குள் கிடத்தப்பட்ட என் உடல் மீதிருந்த ரோஜா இதழ்களின் முனை கூட வாடவில்லை. அதற்குள் கழகத்தை பிளந்தீர்களே. பொறுக்குமா என் ஆன்மா? மாறி மாறி நீங்கள் தூற்றிக் கொண்டிருக்கும் வார்த்தை அம்புகள் குத்திக் கிழிப்பது என் ஆன்மாவையல்லவா! 

பதவி,பணம், அதிகாரம் இது மட்டும்தான் உங்கள் இலக்கா? விட்டுக் கொடுத்துப் போய் இயக்கத்தின் மாண்பை காப்பாற்றவே மாட்டீர்களா? ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் தனியொரு பெண்ணாக, சொந்த கட்சியினரும் சேர்ந்து துரத்த துரத்த ஓடியோடி, ஒதுங்கி, பதுங்கி காத்திருந்து கரையேறியவள் நான். அதிகாரத்தின் உச்சத்தை நான் தொடும் வழியில் நான் கடந்ததெல்லாம் அக்னியாறுகள்தான். நெருப்புக்குள் நீந்திய நாட்களின் வேதனையை இப்போது வரை என் ஆன்மா அனுபவிக்கிறது. 

என் கல்லறை வாசலில் தியானங்கள் நிகழ்ந்தபோதும், சபதங்கள் எடுக்கப்பட்டபோதும் உள்ளே நடுநடுங்கியது என் இதயம்தான், கூவத்தூரில் அடைபட்டுக் கிடந்தது என் இயக்க அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களுமில்லை மாறாக நானும் புரட்சித்தலைவரும் கட்டிக்காத்த கழக மாண்புதான், ஆளும்கட்சியின் ஒரு பிரிவே  அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கோரியபோது மக்கள் மனதில் நம்பிக்கை இழந்தது என் மரியாதைதான், மத்திய அமைச்சர் ஒருவர் கோட்டைக்குள் முதல்வரை அமரவைத்து ஆய்வுக்கூட்டம் நடத்தியபோது குறுகி நின்றது நான் கட்டிக்காத்த மாநில சுயாட்சி தத்துவம்தான். ரெய்டுக்கு பயந்து அமைச்சர்கள் இருவர் நள்ளிரவில் செய்த ஆலோசனை அரசியலால் நைந்து நொந்தது எனது தீரமும், வீரமும்தான். போதும், போதும்! என்னை துன்புறுத்தியது போதும். இனியாவது கழக மாணம் மீளும் வகையிலான செயல்களை... 
செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

சகோதரி சசிக்கு, உன்னை அன்னை என் அன்னைக்கு நிகரான பெண் என்று பெருமை பேசினேன். அதனால்தான் என் கல்லறையிலும் அடித்து சத்தியம் செய்தாயோ? என் ஆத்மா உன் மனசாட்சியோடு தினம் தினம் பேசிக் கொண்டிருப்பதால் இந்த கடிதத்தில் வெளிப்படையாக குறிப்பிட தனியாக ஏதுமில்லை. ஆனால் ஒன்றை மட்டும் வெளிப்படையாக பகிர நினைக்கிறேன்!...

எனக்கென குடும்பம், இரத்த உறவுகள் என்று எதையும் சேர்த்துக் கொள்ளாமல் தோழியின்  மடியே தாய்மடி என்று வாழ்ந்தவள் நான். ஒருவேளை எனக்கென சொந்தங்களை சேர்த்திருந்தால், தமிழர்கள் வருந்துவது போல் ‘அம்மா கடைசி சமயத்துல இப்படி அல்லபட்டு போயிருக்க கூடாதுய்யா’ என்கிற வருத்தம் எழாமல் இருந்திருக்குமோ! கருணாநிதி என்றுமே என் அரசியல் எதிரிதான் ஆனாலும் அவரது நிலை எனக்கு ஆச்சரியத்தை தருகிறது. விளிம்பு வரை சென்றும் அவரை மீட்டெடுக்கிறது குடும்பம். நினைவில்லா நிலையிலும் அன்பின் சின்னமாக வீட்டிற்குள் அமர வைத்து அழகு பார்க்கிறார்கள். தலைவன் இருக்கிறார் எனும் தைரியத்தில் இருக்கிறது அந்த கட்சி. ஆனால் என் நிலை எப்படியோ போய்விட்டதே! ஏன் தோழி?

தொண்டர்களிடம் நான் கேட்பதற்கு ஒன்றுமில்லை. எனக்கு அள்ளியள்ளி கொடுத்து சிவந்த கரங்கள் அவர்களுடையது. இத்தனை நாள் என் சொல்லுக்கு கட்டுப்பட்டு நகர்ந்த கூட்டம். எதிர்பார்ப்பேதுமில்லாமல் தன்னையே தந்து இயக்கத்தை தாங்கிப்பிடித்த கூட்டம். உங்களிடம் நான் வேண்டுவதெல்லாம் ஒரேயொரு விளக்கம்தான், வாழ்க்கையின் விளிம்பு நிலையில் கிடந்தோரை அமைச்சர்களாகவும், எம்.பி.க்களாகவும், அதிகார மையங்களாகவும் மாற்றினேன். கோடான கோடிகளில் புரள்கிறது இவர்களின் குடும்பங்கள். ஆனால் அவர்கள் என்னை வாக்குகளை பறிக்கும் இயந்திரமாகதான் பயன்படுத்தியிருக்கிறார்கள். இன்று என் படத்தை பயன்படுத்துவதும் இதே நோக்கத்தில்தான். 

ஆனால் நான் உங்களுக்கு என்ன செய்தேன், ஏன் என் மீது சமரசமில்லா அன்பை பொழிந்து தள்ளுகிறீர்கள்? விடை தெரிந்தால் விமோசனம் பெறும் என் ஆன்மா. 

பேரறிஞர் அண்ணா நாமத்தையும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நாமத்தையும் உளப்பூர்வமாக நான் போற்றினேன். ஆனால் என் நாமத்தை வாழ்த்தும் உண்மை நெஞ்சம் யாரோ!

click me!