
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி எனவும் அவர் பாஜகவில் இணைந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி எனவும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வருவேன் என வெளிப்படையாக கூறியதையடுத்து தமிழகம் முழுவதும் அவரது டாப்பிக் தான். இதற்கு பலரும் வரவேற்பும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
ரஜினி அரசியலுக்கு வந்தால் எங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை அதிமுகவினர் கூறியுள்ளனர். ரஜினி திமுகவிற்கு வரவேண்டும் என அழைப்பு விடுக்கமாட்டேன், ஆனால் வந்தால் வரவேற்பேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரஜினி எனது நல்ல நண்பர் எனவும் அவர் அரசியலுக்கு வருவதால் தேமுதிகவுக்கு பாதிப்பில்லை எனவும் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மேலும் காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுகரசர் ரஜினி அரசியலுக்கு வந்தால் தனித்து தான் கட்சி தொடங்குவார் எனவும், மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டார் எனவும் தெரிவித்தார்.
இதனிடையே பா.ஜ.கவை சேர்ந்த அமித்ஷா, தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் வெளிப்படையாக ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் ரஜினி இதுவரை எந்த பதிலும் அளிக்காமல் மவுனம் காத்து வருகிறார்.
இந்நிலையில், அந்த வரிசையில் தற்போது பொன்.ராதாகிருஷ்ணன் கைகோர்த்துளார்.
கரூரில் நடைபெற்ற மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. எல்லா தரப்பினரும், அரசியல்வாதிகளும் பா.ஜ.க.வுக்கு வரவேண்டும். தமிழகத்தில் எப்படியாவது மாற்றத்தை கொண்டுவரவேண்டும்.
நடிகர் ரஜினிகாந்த் இந்த கால கட்டத்தில் ஒரு நல்ல அரசியல் முடிவை எடுத்தால் மகிழ்ச்சி. அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி.
ரஜினி மிகவும் பிரபலமானவர். எனவே அவர் முதல்வர் வேட்பாளரா என்பது குறித்து கட்சிதான் முடிவு செய்யும்.
மதவாத சக்திகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ரஜினி பா.ஜ.க.வில் சேரக்கூடாது என்று கூறும் திருமாவளவன் ஜாதிய சக்திகளை ஊக்குவிக்கலாமா?
பா.ஜ.க.வில் சாதி, மத பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் உறுப்பினர்களாக இருந்து வருகிறார்கள். மதவாதிகள் என்றால் என்ன அர்த்தம் என திருமாவளவன் விளக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.