
தமிழகத்தில் திரைப்பட பாடலாசிரியராக தடம் பதித்த கண்ணதாசனும், வாலியும் ஆன்மீகத்தில் மிகப்பெரிய நாட்டமுடையவர்களாக இருந்தனர். கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ இன்னொரு பகவத் கீதையாகவே பார்க்கப்படுகிறது. வாலியும் இராமனுஜ காவியம் எழுதி தன் எழுத்தை சீர்படுத்திக் கொண்டார். இந்நிலையில் இவர்களின் வழியில் வந்த வைரமுத்துவோ, ஆண்டாளை அவதூறாக பேசி தமிழகத்தில் மிகப்பெரிய மத ஆதங்கத்துக்கு விதை போட்டுவிட்டார் என்று ஆதங்கப்படுகிறார்கள் ஆன்மிக இலக்கிய பார்வையாளர்கள்.
வைரமுத்துவுக்கு எதிராக தமிழகமெங்கும் பல வகையான போராட்டங்கள் நடந்து வருகின்றன. அவற்றில் கலந்து கொள்ளும் வைணவ பெரியவர்கள் வேதனையும், ஆதங்கமும் கலந்த குரலில் கவிப்பேரரசுவிடம் நியாயம் கோருகிறார்கள்.
இந்நிலையில் சிவாச்சாரியார்களும் இதில் வைணவ பெரியவர்களுக்கு ஆதரவாக கலந்து கொண்டிருப்பது எதிர்ப்புக்கு வலுவூட்டியிருக்கிறது.
அந்த வகையில் வைரமுத்துவுக்கு எதிராக விமர்சனம் பாய்ச்சியுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் மணவாள மாமுனிகள் மடம் ஸ்ரீமத் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், ‘ஆண்டாள் தாயாரை வைரமுத்து இழிவாக பேசியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். வரும் செவ்வாய்க்கிழமைக்குள் வைரமுத்து ஸ்ரீவில்லிப்புத்தூர் தாயார் சன்னதியில் வந்து மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையென்றால் 17-ம் தேதி காலை 9:00 மணி முதல் நாங்கள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிப்போம். செவ்வாய்க்கிழமைக்குள் நல்ல விடை கிடைக்காவிட்டால் அனைத்து மக்களும் குரல் கொடுத்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வைரமுத்துவை வரவழைப்போம்” என்றிருக்கிறார்.
பேரூர் ஆதினத்தின் இளையபட்டம் மருதாசல அடிகளார் “இந்து மதத்தில் நம்பிக்கை கொண்டு அருட் பணி ஆற்றியவர்கள் குறித்து பல்வேறு வகையில் அவதூறாக பேசுவதும், எழுதுவதும் தமிழகத்தில் வழக்கமாக போய்விட்டது. ‘மாதொரு பாகன்’ போன்ற நூல்களில் அவதூறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதேபோல் ஆண்டாள் குறித்து தவறான முறையில் ஒரு ஆய்வு நூலை எழுதியுள்ளனர். அதை வெளிப்படுத்தும் வகையில் தவறாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. பிற மதங்கள் குறித்து எவ்வித விமர்சனங்களும் இல்லாத சூழலில் இந்து மதம் குறித்து பழித்து சொல்வது தொடர்ந்து கொண்டுள்ளது. அகில இந்திய இந்து துறவிகள் சங்கம் சார்பில் இதற்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றிருக்கிறார்.
சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளாரோ “நம் நாடு ஆன்மிக நாடு. பெண் அடியாராக போற்றப்படும் ஆண்டாளின் பாசுரம், பெண்களின் சிறப்பை எடுத்துக் கூறுகிறது. அடியாராக இருந்து இறைவனை அடைய முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டாக இருந்தவர் ஆண்டாள். அவரது பெருமையை சிறுமைப்படுத்தும் வகையில் வைரமுத்து பேசியிருப்பது வருந்தத்தக்கது. பேசுகின்றவர்கள் பல முறை யோசித்த பின் பேச வேண்டும்.” என்றுள்ளார்.
“கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் தங்கள் வழியில் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். கடவுள் உள்ளார் என்று நம்புபவர்களின் மனங்களை வைரமுத்து போன்றவர்கள் புண்படுத்தக்கூடாது. இந்து மத கடவுள்களை, இதிகாச புராணங்களை இழிவுபடுத்தி பேசுபவர்கள், பிற மதங்களை சார்ந்த கருத்துக்களை தெரிவிப்பதில்லை. இந்துக்கள் வழி படும் கடவுள்களை தவறாஅக பேசுவது நாகரிகமற்ற செயல்.” என்று ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.