
நன்றாக கவனித்துப் பாருங்கள் கடந்த சில நாட்களாக ரஜினியின் அரசியல் பரபரப்பு அடங்கிப் போய்விட்டது. ஏன்? என்றால்...காரணங்கள் இருவர் என்கிறார்கள் விமர்சகர்கள். ஒருவர் வைரமுத்து மற்றொருவர் கமல்ஹாசனாம். திட்டமிட்டு ரஜினி பரபரப்பை இவ்விரு தமிழர்களும் இணைந்து முடித்துக் கட்டியிருக்கின்றனர் என்கிறார்கள்.
ஏனாம்? எப்படியாம்?...விமர்சகர்கள் சொல்லும் விளக்கங்கள்...
கமலும், ரஜினியின் என்னதான் நீண்ட கால நண்பர்கள் என்றாலும் கூட, கர்நாடகாவில் இருந்து வந்த ரஜினி தமிழகத்தில் சினிமாவில் நம்பர் 1 ஆக இன்று வரையில் இருந்து வருவதில் கமலுக்கு ஒரு ஆதங்கம் உண்டு. நடிப்பை பொறுத்தவரையில் ரஜினியை விட கமல் எட்ட முடியாத உயரத்தில் இருந்தாலும் கூட பெயரும், புகழும் என்னவோ ரஜினியைதான் அப்பிக் கொண்டிருக்கின்றன.
இதில் நெடுங்காலமாக ஆதங்கத்தில் இருக்கும் கமல், ரஜினி சில மாதங்களுக்கு முன் அரசியல் எண்ட்ரியை தீவிரமாக யோசிக்க துவங்கியதும் டென்ஷன் ஆனார். ’சினிமாவில் அவரிடம் பின் தங்கினேன், ஆனால் அரசியலில் தமிழ்நாட்டில் என் உரிமையை விடமாட்டேன்.’ என்று தன்க்கு மிக நெருக்கமான பச்சை தமிழ் நண்பர்கள் சிலரிடம் சபதமே போட்டார். அதன் படியே திடுதிப்பென ட்விட்டர் அரசியலை துவக்கி ஆளுங்கட்சியுடன் மோதலை உருவாக்கி, டோட்டல் தேசத்தையும் தன் பக்கம் திருப்பினார். இதில் ரஜினியின் பரபரப்பு அவுட் ஆகியது.
இந்நிலையில் விஸ்வரூபம் 2 பட ஒலி சேர்ப்பு விஷயத்துக்காக கமல், அமெரிக்கா சென்றுவிட, இங்கே டிசம்பர் 31-ம் தேதியன்று ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி. அடுத்த பொது தேர்தலில் தனிகட்சி ஆரம்பித்து போட்டியிடுவேன்.’ என்று பட்டாசை பற்ற வைத்தார் ரஜினி. அன்றிலிருந்து சுமார் ஒருவார காலம் ரஜினி பரபரப்பே தமிழகத்தில் பற்றி எரிந்தது.
இதில் கமலுக்கு ஏக டென்ஷன்! ரஜினி பரபரப்பை பிரேக் செய்ய அவர் திட்டமிட்ட வேளையில்தான், சட்டென்று வைரமுத்து மூலமாக முளைத்தது ‘ஆண்டாள் சர்ச்சை’. கடந்த நான்கு நாட்களாக ரஜினி பரபரப்பை முற்றிலுமாக பின்னுக்கு தள்ளிவிட்டு வைரமுத்து விவகாரம்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. வைரமுத்து இந்த பரபரப்பை கிளப்பியதே திட்டமிட்டு ரஜினியை ஓரங்கட்டத்தான்.
ரஜினியும், வைரமுத்துவும் மிக நெருங்கிய நண்பர்களே. தமிழர்களின் தலைவனாக ரஜினியை தனது பாடல்களின் வழியே வடிவமைத்ததே வைரமுத்துதான். ஆனால் அப்பேர்ப்பட்ட வைரமுத்துக்கு, ரஜினியுடன் கபாலி பட சமயத்தில் ஒரு பிணக்கு. அதாவது ரஞ்சித் இயக்கிய அந்தப் படத்தில் வைரமுத்துக்கு ஒரு பாடல் கூட எழுத வாய்ப்பு தரப்படவில்லை. ரஜினி நினைத்திருந்தால் அதை தவிர்த்திருக்கலாம். ஆனால் ரஜினி அதை செய்யவில்லை என்பது வைரமுத்துவின் கோபம். அதை, கபாலி படம் வெளியானதுமே அதன் வெற்றி! தோல்வி! குறித்து சர்ச்சையான ஒரு கருத்தை சொல்லி வெளிப்படுத்தினார் வைரமுத்து. அன்றிலிருந்து இருவருக்கும் இடையிலான மனகசப்பு வலுப்பெற்றது.
இந்நிலையில்தான் அரசியல் பிரவேசத்தை அறிவித்த ரஜினியால் தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியானது வைரமுத்து மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. ஆண்டாள் சர்ச்சையை கிளப்பியதன் மூலம் தமிழகத்தின் கவனம் வைரமுத்து பக்கம் திரும்பியுள்ளது.
அதேபோல் கமல்ஹாசனும் ‘ஜனவரி 18ம் தேதி எனது அரசியல் பயணம் பற்றி கூறுவேன். ஜனவரி 26 முதல் தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்.’ என கூறி தன் பங்குக்கு பட்டாசுகளை பற்ற வைத்து ரஜினியை இன்னும் டம்மியாக்கியுள்ளார்.
ஆக இவ்விரு தமிழர்களும் தங்கள் ரூட்டில் ரஜினிக்கு செக் வைத்துள்ளனர் செமத்தியாக! என்கிறார்கள்.
அக்மார்க் அரசியல்வாதிங்களை விட மோசமா இருக்குதே இவங்களோட சாகசங்கள்!