
ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட தினகரனை ஊடகங்களும் பத்திரிகைகளும்தான் மிகைப்படுத்திக் காட்டுகின்றன என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலத்துக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், காவிரி வழக்கில் தமிழகத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று தாம் நம்புவதாகக் கூறினார்.
மேலும், அதிமுக., வை உடைக்கவும் கவிழ்க்கவும் நடைபெற்ற முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது என்று கூறிய முதல்வர், தினகரன் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர், கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவரின் பேச்சுக்கு பதிலளிக்க வேண்டிய தேவையில்லை என்று கூறினார். மேலும், தினகரனை ஊடகங்களும் பத்திரிகைகளும் மிகைப்படுத்திக் காட்டுகின்றனர், ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவர் தினகரன் என்று கூறினார்.
தொடர்ந்து, சேலத்திற்கு விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப் படும் என்றும், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நானும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் தொடங்கி வைக்கிறோம் என்று கூறினார்.
காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர், காவிரி நீரை கர்நாடகா வழங்க வேண்டும். காவிரியில் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி கர்நாடக நீரை வழங்க வேண்டும் என்று கூறிய அவர், காவிரி வழக்கில் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.