
பொங்கல் திருநாளை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை கட்சித் தொண்டர்களை சந்தித்தார்.
பொங்கல் திருநாள் என்றால் திமுக., தொண்டர்களைச் சந்தித்து உரையாடுவது திமுக., தலைவர் கருணாநிதிக்கு வழக்கம். தன்னைச் சந்திக்கும் கட்சித் தொண்டர்களுக்கு பொங்கல் படி என்ற வகையில், அவர்களுக்கு ரூ.10 கொடுத்து, வாழ்த்துகளைத் தெரிவிப்பார் கருணாநிதி.
ஆனால், அண்மைக் காலமாக, உடல் நலக்குறைவால் சிரமப் பட்டு வந்த கருணாநிதி, கடந்த ஆண்டு தொண்டர்களைச் சந்திக்கவில்லை. இந்நிலையில் கருணாநிதியின் உடல் நிலையைப் பரிசோதித்து மருத்துவர்கள் அனுமதி வழங்கியதன் அடிப்படையில் அவர் தொண்டர்களைச் சந்திக்கலாம் எனக் கூறப்பட்டது. குடும்பத்தினர் ஆலோசனைக்குப் பின்னர் பொங்கல் திருநாளில் அவர் தொண்டர்களை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது, கருணாநிதிக்கு பூங்கொத்து கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதன்படி இன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் கட்சித் தொண்டர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் கருணாநிதி. அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த தொண்டர்கள் அவரிடம் இருந்து ஆசி பெற்றனர்.
வெகு நாட்களுக்குப் பின்னர் கட்சித் தலைவரைச் சந்திப்பதால், ஏராளமான தொண்டர்கள் அவரது வீட்டு வாசலில் குவிந்தனர்.