
தமிழக அரசியலில் சில விஷயங்களில் ‘முன்னோடி’ என தடம் பதித்தவர் ஜெயலலிதா. அரசியலில் இணைய தளங்களின் வீரியத்தை முன்னரே கணித்து ‘ஐ.டி. விங்’ எனும் அமைப்பையே கட்சியில் உருவாக்கினார். அவரை பார்த்துதான் மற்ற கட்சிகள் தங்களுக்கும் அப்படியொரு கட்டமைப்பை ஏற்படுத்தினார்கள். இணையதள அணி விஷயத்தில் முன்னோடியாக இருந்து பெருமை தேடிக் கொண்ட அ.தி.மு.க., அந்த அணிக்குள் சண்டையிட்டு மூக்குடைத்து கொள்வதிலும் முன்னோடியாக இருந்துவிடுமோ என்று நொந்து கிடக்கின்றனர் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ்.
ஜெயலலிதா ஐ.டி. விங்கை உருவாக்கியதும் அதன் மாநில செயலாளராக அஸ்பயர் சாமிநாதனை நியமித்தார். சில மாதங்களுக்குப் பின் அவரை நீக்கிவிட்டு ராமச்சந்திரனை நியமித்தார்.
ஜெ., மறைவுக்குப் பின் இந்த ராமச்சந்திரன் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக மாறி, தர்மயுத்தத்தில் கலந்து கொண்டார். இதனால் மதுரை எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யனை மாநில செயலாளராக நியமித்துக் கொண்டது ஆளும் அணி.
இந்த நிலையில் பன்னீரும், பழனிச்சாமியும் மீண்டும் இணைந்த பின் பழைய ராமச்சந்திரனே ஐ.டி. அணியின் மாநில செயலாளர் பொறுப்பை ஏற்றார். ஆனால் ராஜ் சத்யனால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரது ஆதரவாளர்கள் ராமச்சந்திரனை கிண்டலடித்து இணையத்தில் மீம்ஸ் போன்றவற்றை தட்டிவிடுவது வழக்கமானது. இதற்கு ராமச்சந்திரன் தரப்பும் பதிலடி கொடுத்து வந்தது.
இந்த சூழலில் ராஜ் சத்யன் தனக்கு ஆதரவான தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர்களை அழைத்துக் கொண்டு போய் இரு முதல்வர்களையும் சந்தித்துள்ளார். இது ராமச்சந்திரனுக்கு நேரடியாக சவால் விடுக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது. மாநில செயலாளர் பதவியை மீண்டும் பிடிப்பதற்காக தனது படை பலத்தை காட்டுவதற்காகவே ராஜ் சத்யன் இப்படி செய்திருப்பதாக கட்சி நிர்வாகிகள் கதைகதைக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து மாஜி சத்யன் மற்றும் சிட்டிங் ராமச்சந்திரன் இரண்டு தரப்புகளும் இணையத்தில் மீம்ஸ் மற்றும் நக்கல் நய்யாண்டி விமர்சனங்களின் வழியே மோதிக் கொள்கின்றனர். கட்சி விழாக்களிலும் இரண்டு தரப்பும் ஒன்றை ஒன்று உரசியபடியேதான் திரிகிறதாம். என்றைக்கு இது வெளிப்படை சண்டையாக மாறப்போகிறதோ என்பதே இரு முதல்வர்களின் தற்போதைய கவலையாக உள்ளது.