அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் நேற்று கைது செய்த நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க தயாராக உள்ளதாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விளக்கமளித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் நேற்று கைது செய்த நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி நேற்று பிற்பகலில் மருத்துவமனைக்குச் சென்று செந்தில் பாலாஜியை சந்தித்த பின்னர், வரும் 28-ம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரியும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய அனுமதி கோரியும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதேபோல, அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை, முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் எடுத்துரைக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆனால், மெமோவை பெற செந்தில் பாலாஜி மறுத்ததாகவும், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டதை நிராகரிக்க முடியாது என்றும் வாதிட்டார். கைது தொடர்பாக செந்ததில் பாலாஜி மனைவி, சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாகவும் வாதிட்டார்.
செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் வைத்து பிறப்பித்த உத்தரவு சரியானது என்றும் அவருக்கு ஜாமீன் வழங்ககூடாது என்றும் இடைக்கால ஜாமீன் வழங்க சட்டத்தில் இடமில்லை என்றும் தெரிவித்தார். நேற்று முன்தினம் வரை ஆரோக்கியமாக இருந்தவர் திடீரென உடல்நலக்குறைவு கூறியிருக்கிறார் என்றும் குறிப்பட்டார்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய செந்தில் பாலாஜிக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க அமலாக்கத்துறை தயாராக இருக்கிறது என்று கூறினார். இந்நிலையில், இஎஸ்ஐ மருத்துவர்கள் பார்த்து சென்றதாக வாதிட்டும் அதை ஏற்க அமலாக்கத்துறை மறுத்துவிட்டதாக திமுக குற்றம்சாட்டியது.