கோடி கோடியாக சம்பாதிக்கும் தனியார் பள்ளிகள்.. ஏழை மாணவர்கள் கட்டணத்தில் கறார், நீதிமன்றத்தில் வழக்கு.

By Ezhilarasan BabuFirst Published Dec 9, 2020, 2:06 PM IST
Highlights

இந்த சட்டப்பிரிவை செல்லாது என அறிவிக்க கோரி சென்னையில் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் பஞ்சாப் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கட்டணமாக, கட்டண நிர்ணயக் குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையே வழங்கக் கோரிய மனுவுக்கு மத்திய -  மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய கல்வி வழங்கும் வகையில், கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டப்படி, தனியார் பள்ளிகள், 25 சதவீத இடத்தை ஏழை எளிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விச் செலவை அரசே வழங்க வேண்டும்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எவ்வளவு செலவிடப்படுகிறதோ அத்தொகையை அரசு, தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என இந்த சட்டப்பிரிவு தெரிவிக்கிறது. ஆனால் இந்த சட்டப்பிரிவை செல்லாது என அறிவிக்க கோரி சென்னையில் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் பஞ்சாப் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதகவும், பள்ளிகளுக்கு ஏற்படும் செலவுகளை கணக்கில் கொண்டு கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் நிலையில், கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்விச் செலவுத் தொகையை கணக்கிட்டு, தனியார் பள்ளிகளுக்கு குறைந்த கட்டணத்தை வழங்குவது தன்னிச்சையானது எனக் கூறப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயக் குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை, கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு, மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
 

click me!