
பிரதமர் மோடியை நான் தொடர்ந்து விமர்சனம் செய்வேன் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், அண்மையில் அவர் வீட்டின் முன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து பேசி வருகின்றனர்.
கௌரி லங்கேஷ் குடும்பத்தினருடன் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு நட்பு முறையில் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதால், இந்த விவகாரத்தில், அவர் அதிகம் உணர்ச்சி வசப்பட்டவராய் ஊடகங்களில் பேசினார். அப்போது, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறுகையில், “கௌரி கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி ஆழ்ந்த மௌனத்தைக் கடைபிடிக்கிறார். அவர் என்னை விட மிகச் சிறந்த நடிகராக உள்ளார்” என்று கருத்து தெரிவித்தார்.
பிரகாஷ்ராஜின் இந்தக் கருத்துக்கு பாஜக.,வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சித்தார் என்று கூறி, உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 7 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் தன் மீது தொடரப்பட்ட வழக்கு குறித்து தாம் கவலைப்படப் போவதில்லை என்றும், தொடர்ந்து மோடி குறித்து நான் பேசுவேன் என்றும் ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அந்தப் பேட்டியில், “நான் பிரதமர் மோடிக்கு எதிரானவன் என்கிறார்கள். பிரதமர் மோடி இந்த நாட்டின் பெரும்பாலான மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு தலைவர். இந்த நாட்டின் குடிமகனாக ஒரு நடிகனாக அவருடன் மாறுபட எனக்கு உரிமை உண்டு. இப்போது அவர் ஒரு கட்சியைச் சார்ந்தவர் இல்லை. மத சார்பற்ற நாட்டின் பிரதிநிதியாக இருப்பவர். ஒரு ஜனநாயக நாட்டில், பத்திரிகையாளர் கொலை விவகாரத்தில் அவர் மௌனமாக இருப்பதை பொறுப்புள்ள குடிமகனான என்னால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. நான் ஜனநாயகத்தை நம்புகிறேன். எனக்கு எப்போது, எங்கே அவசியம் என்று தோன்றுகிறதோ அப்போது நான் தொடர்ந்து பேசுவேன். என் மனதில் தோன்றுவதை நான் துணிந்து சொல்வேன். என் கருத்தை வெளியிட உரிமையும், சுதந்திரமும் எனக்கு உள்ளது.
நான் இவ்வாறு பேசுவதால், ஏதோ அரசியலுக்கு வர தீவிரமாக யோசிக்கிறேன் என்று சிலர் நினைக்கலாம். நான் அரசியலுக்கு வர விரும்பினால் நேரடியாக எனது விருப்பத்தை உங்களிடம் வெளியிடுவேன். நான் ஒரு நல்ல மனிதனாக செயல்படவே ஆசைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.
அவரது இந்தக் கருத்தின் மூலம், தன் மீது வழக்கு போடப்பட்டாலும், தான் தொடர்ந்து மோடியை விமர்சிப்பேன் என்று தெளிவுபடுத்தியுள்ளார் பிரகாஷ் ராஜ்.