
டெங்குவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 24 மணி நேரம் அரசு மருத்துவனை இயங்க சிறப்பு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், டெங்கு காய்ச்சலின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 10 பேர் டெங்கு காய்ச்சலால் இறப்பதாகவும், இதுவரை 400-க்கும் மேற்பட்டவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
ஆனால் தமிழக சுகாதாரத்துறை டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்து வருகிறது. மேலும் டெங்குவை ஒழிக்க பல்வேறு இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே தமிழகம் முழுவதும் 10,000-த்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக, அரசின் சுகாதாரத்துறை செயலாளரே கூறியிருக்கிறார். ஆனால், இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 26 பேர் மட்டுமே உயிரிழந்ததாக அரசு தரப்பில் கூறப்படுகிறது என எதிர்கட்சிதலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார்.
இந்நிலையில், டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, டெங்குவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 24 மணி நேரம் அரசு மருத்துவனை இயங்க சிறப்பு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
டெங்குவை முழுவதும் ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு முழுவதும் தேவை. காய்ச்சல் வந்தால் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும் எனவும், டெங்கு கொசு பகலில் தான் கடிக்கும் எனவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.