பாதிரிமார்கள் அரசியல் பேச்சை கேளுங்க.. ஆதீனங்கள் பேசினால் கொதிக்கிறீங்க.? டரியல் ஆக்கும் ராமரவிக்குமார்.

By Ezhilarasan BabuFirst Published Jun 21, 2022, 9:00 PM IST
Highlights

பாஜக தான் நமது ஒரே எதிரி என பாதிரி ஒருவர் பேசும் வீடியோவை பகிர்ந்துள்ள இந்து தமிழ் கட்சியின் தலைவர் ராம ரவிக்குமார் பாதிரிகளுக்கு ஒரு நீதி ஆதீனத்துக்கு ஒரு நீதியா என கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக தான் நமது ஒரே எதிரி என பாதிரி ஒருவர் பேசும் வீடியோவை பகிர்ந்துள்ள இந்து தமிழ் கட்சியின் தலைவர் ராம ரவிக்குமார் பாதிரிகளுக்கு ஒரு நீதி ஆதீனத்துக்கு ஒரு நீதியா என கேள்வி எழுப்பியுள்ளார். ஆதீனங்கள் அரசியல் பேசக்கூடாது என அமைச்சர்கள் எச்சரித்துவரும் நிலையில்  ராம ரவிக்குமார் இந்த கேள்வியை முன் வைத்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக, இந்து இயக்கங்கள்  மற்றும் திமுக இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. அரசு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையையும் பாஜகவினர் ஏதாவது ஒரு வகையில் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக இந்து சமய அறநிலைத்துறைக்கு எதிரான விமர்சனங்கள் கடுமையாக இருந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்பட வேண்டும் என்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள இந்து கோவில்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் பாஜகவினர் குரல் கொடுத்து வருகின்றனர். திமுக அரசு இந்துக்களுக்கு எதிராகவும் இந்து மதத்துக்கு எதிராகவும் செயல்படுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதே குரலில் தற்போது மதுரை ஆதீனமும் பேசத் தொடங்கியுள்ளார்.

 அவரின் பேச்சுக்கள் திமுக அரசுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் எதிராகவே இருந்து வருகிறது. சமீபத்தில் மதுரை  பழங்காநத்தம் விஷ்வ இந்து பரிஷத் ஒருங்கிணைத்த துறவிகள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மதுரை ஆதீனம், திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். இந்து சமய அறநிலைத்துறையிடமிருந்து இந்துக் கோயில்களை விடுவிக்க வேண்டும் என்றும் இந்து கோவில்களை மடாதிபதிகள் மற்றும் ஆதினங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்து சமய அறநிலைத்துறை என்ற பெயரில் கொள்ளை நடக்கிறது என்றும் மக்கள் உண்டியலில் காசு போட வேண்டாம் என்றும் பேசினார். அவரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆதீனம் அரசியல் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லை என்றால் அவருக்கு பதில் சொல்ல பல வழிகள் இருக்கிறது என எச்சரித்திருந்தார்.

அந்த எச்சரிக்கை சர்ச்சையாக மாறியுள்ளது, பாஜக மற்றும் இந்து இயக்கங்கள் ஆதினத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர், ஆதீனத்தை மிரட்டும் வேலையை அமைச்சர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.இந்நிலையில் தமிழ் இந்து இயக்கத்தின் மாநில தலைவர் ராம ரவிக்குமார் தனது  முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்று பகிர்ந்துள்ளார்.  

திருச்சி மறைமாவட்ட கத்தோலிக்க சங்கம் சார்பில் 52 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கலந்துகொண்டுள்ளார். அதில் பேசும் பாதிரியார் ஒருவர்,  நாம் அனைவரும் பொதுத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறோம், இந்தியாவுக்கு மட்டுமல்ல நாம் அனைவருக்கும் ஒரே எதிரி பாஜக தான், இந்த அழுத்தம் திருத்தமான கருத்தை உணர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்தாக வேண்டும்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பாஜகவுக்கு எதிராக அணிதிரள வேண்டும், அப்படி சேர்ந்தாலொழிய  நம் எதிரியை நாம்  வீழ்த்த முடியாது. மாயாவதி ஒதுங்குகிறார், முலாயம் சிங் யாதவ் ஒதுங்குகிறார் என்பது எல்லாம் பார்க்கும்போது அச்சமாக இருக்கிறது.

எனவே திமுகவின் அரசியல் வீயூகத்தால், ஞானத்தால் நீங்கள் யாரையெல்லாம் தொடர்பு கொள்கிறீர்களோ, குறிப்பாக வட இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களை தொடர்புகொண்டு, நமக்கு ஒரு எதிரி இருக்கிறான் என்பதை உணர்ந்து, எதிரியை வீழ்த்துவதற்கான வியூகம் வகுக்க வேண்டும். அப்படி செய்வீர்களானால் அதுதான் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் மாபெரும் வெற்றியாக இருக்கும் என அதில் பேசுகிறார். 

அதாவது ஆதினங்கள் அரசியல் பேசக்கூடாது என  கூறும் இவர்கள் ஏன் பாதிரிமார்கள் அரசியல் பேசக்கூடாது என கூற தயங்குகிறார்கள். அப்படி என்றால் ஆதீனங்களுக்கு ஒரு நீதி, பாதிரிமார்களுக்கு ஒரு நீதியா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவரின் இந்த பதிவுக்கு பலரும் பல வகையில் கருத்து கூறி வருகின்றனர். 
 

click me!