ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது அவர் பக்கம் நின்ற மாஃபா பாண்டியராஜன் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் தாவியிருக்கிறார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். தங்களுடைய ஆதரவாளர்கள், ஆதரவு நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் தனித்தனியாக இருவரும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த மூத்த தலைவர்கள் தம்பிதுரை, செல்லூர் ராஜூ, செங்கோட்டையன் ஆகியோர் முயற்சி செய்தனர். ஆனால், இந்த முயற்சிக்கு பலன் ஏதும் கிடைக்கவில்லை.
ஒற்றைத் தலைமை கூடாது என்பதில் ஓபிஎஸ் உறுதியாக இருப்பது போல, இரட்டைத் தலைமை கூடாது என்பதில் இபிஎஸ் தீவிரமாக இருக்கிறார். இதனால், இரு தரப்பும் மாறி மாறி விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். இதனையடுத்து பொதுக்குழுவை நடத்த விடக் கூடாது என்ற முயற்சியில் ஓபிஎஸ் தரப்பு இறங்கியுள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடுவார்கள் என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று இபிஎஸ்ஸுக்கு எழுதிய கடிதத்தை ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதே காரணத்தை முன்வைத்தும் பொதுக்குழுவுக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்றும் ஆவடி காவல் நிலையத்திலும் ஓபிஎஸ் தரப்பு மனு அளித்துள்ளது.
இதற்கிடையே எடப்பாடி பழனிச்சாமிக்கு நிர்வாகிகள் மத்தியில் ஆதரவு அதிகரித்துள்ளது. குறிப்பாக ஓபிஎஸ் பக்கம் நின்ற மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் தாவி உள்ளனர். ஓபிஸ் பக்கம் நின்ற நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜாவும், விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரனும், திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் வி. அலெக்சாண்டரும் இன்றைக்கு எடப்பாடி பக்கம் போய்விட்டார்கள். குறிப்பாக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் திரும்பி ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்ததோடு மட்டுமல்லாமல், காலில் விழுந்தும் ஆசி பெற்றார் மாஃபா பாண்டியராஜன். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த 2017-ஆம் ஆண்டில் ஓபிஎஸ் தர்மயுத்தத்தைத் தொடங்கியபோது அவருக்கு ஆதரவு அளித்த ஒரே அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்தான். இதனால்தான் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைப்புக்குப் பிறகு மாஃபா பாண்டியராஜனுக்கு மீண்டும் அமைச்சர் பதவியை வாங்கிக் கொடுத்தார் ஓபிஎஸ். அவருக்கு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளராக இருந்த மாஃபா பாண்டியராஜன் இபிஎஸ் முகாமுக்கு மாறியிருக்கிறார். சில தினங்களுக்கு முன்புதான் முன்னாள் எம்.பி. டாக்டர் மைத்ரேயனுடன் மாஃபா பாண்டியராஜனும் ஓபிஎஸ்ஸைச் சந்தித்தார். அடுத்த சில தினங்களில் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து ஓபிஎஸ் தரப்புக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.