சு.சாமியின் வரட்டுக் கூச்சலையும் வெற்று மிரட்டலையும் தூர வையுங்க.. ஸ்டாலினுக்கு ஆதரவாக நெடுமாறன் வாய்ஸ்!

By Asianet TamilFirst Published Aug 17, 2021, 8:21 PM IST
Highlights

அனைத்து சாதியினரும் அர்ச்சராகலாம் என்ற ஆணையை திரும்பப் பெறாவிட்டால் உரிய நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என தமிழக அரசை மிரட்டியுள்ளார் சுப்பிரமணியசாமி. இந்த வரட்டுக் கூச்சலுக்கும், வெற்று மிரட்டலுக்கும் செவிசாய்க்க வேண்டியதில்லை என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கோயில்கள் ஆகம முறைப்படி கட்டப்பட்டு, ஆகம முறைப்படியே பூசைகள் நடத்தப்படுகின்றன; வேத முறைப்படியல்ல.  தமிழக அரசு அமைத்துள்ள பயிற்சி மையங்களில் ஆகம முறைகள், தமிழில் வழிபாடு ஆகியவற்றில் நன்கு பயின்று சான்றிதழ்கள் பெற்ற பிற்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் அனைத்து சாதிகளைச் சேர்ந்தவர்கள் 38 கோயில்களில் அர்ச்சகர்களாக நியமித்து ஆணை பிறப்பித்த முதல்வர் ஸ்டாலினை மனமார பாராட்டுகிறேன்.
திருநாவுக்கரசர், ராமானுசர் போன்றவர்கள் காலத்திலிருந்து வள்ளலார், பெரியார் காலம் வரை இறைவழிபாட்டில் சாதி ஏற்றத்தாழ்வுகள் கூடாது என்பதையும், தமிழில் வழிபாடு நடத்தப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தி வந்த கனவு இப்போது நனவாகியுள்ளது. இதற்காக மகிழ்ச்சியடைவதற்குப் பதில், சாதி ஆதிக்க மனோபாவம் கொண்டவர்கள் எதிர்ப்புக் கூச்சல் கிளப்புவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். குறிப்பாக, சுப்ரமணிய சுவாமி போன்றவர்கள் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசின் முடிவு தவறானது என்றும், இந்த ஆணையை திரும்பப் பெறாவிட்டால் உரிய நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என தமிழக அரசை மிரட்டியுள்ளார். இந்த வரட்டுக் கூச்சலுக்கும், வெற்று மிரட்டலுக்கும் செவிசாய்க்க வேண்டியதில்லை.
2011-ஆம் ஆண்டு இந்திய அரசு எடுத்த மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி 133 கோடி மக்களில் சமஸ்கிருத மொழியை எழுத, படிக்கத் தெரிந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,821 மட்டுமே. தமிழ்நாட்டில் இவர்களின் எண்ணிக்கை வெறும் 803. இவர்களில் ஆண்கள் 402பேர், பெண்கள் 401பேர். அர்ச்சகர்களாக பெண்களை ஆதிக்க சாதியினர் அனுமதிப்பதில்லை. எனவே, தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் தெரிந்த அர்ச்சகர்களின் எண்ணிக்கை வெறும் 402 மட்டுமே. எனவே, தமிழ்நாட்டில் உள்ள 32,000க்கும் மேற்பட்ட கோயில்களில் வடமொழியில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களில் மிகப்பெரும்பாலோருக்கு அம்மொழி தெரியாது என்ற உண்மை அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.
சமஸ்கிருத மந்திரங்களை தமிழிலேயே எழுதி வைத்துக்கொண்டு தப்பும், தவறுமாக ஓதுகிறார்கள். எனவே, வடமொழியில் அர்ச்சனை செய்பவர்களுக்குத் தேர்வு நடத்தி, அந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும். தேர்வு பெறாதவர்களை நீக்கிவிட்டு அந்த இடங்களில் அரசு பயிற்சி மையங்களில் தமிழ் அர்ச்சனை செய்வதில் தேர்ச்சிப் பெற்றவர்களை உடனடியாக நியமிக்கும்படி முதல்வரை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
 

click me!