போலி பத்திரங்களை ரத்து செய்ய சார் பதிவாளருக்கு அதிகாரம்.. அமைச்சர் மூர்த்தி தகவல்..!

By vinoth kumarFirst Published Aug 17, 2021, 7:55 PM IST
Highlights

போலி பத்திரப்பதிவு அதிமுக ஆட்சிக்காலத்திலேயே ரத்து செய்யப்பட்டுவிட்டது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மூர்த்தி, போலி பத்திரத்தை பதிவாளர் ரத்து செய்யும் அதிகாரம் தற்போது சட்டத்திருத்தம் மூலம் அளிக்கப்பட்டுள்ளது.

போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரத்தை சார் பதிவாளருக்கு வழங்கும் சட்ட திருத்தத்தை அறிமுகம் செய்திருப்பதாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், கடலூர் மாவட்டத்தில் 100 ஏக்கர் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், அதனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்த வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி;- தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் போலியான ஆவணங்கள் மூலமாகவும், ஆள்மாறாட்டங்கள் மூலமாகவும் கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார். இது போன்ற பத்திரப்பதிவுகளை நேரடியாக ரத்து செய்ய தற்போது பதிவுத்துறை அதிகாரம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். போலியான பத்திர பதிவுகளை துறைத்தலைவரே நேரடியாக ரத்து செய்வதற்கு அதிகாரம் வழங்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் இந்த சட்டத்தின் மூலம் போலி பத்திரப்பதிவுகள் ரத்து செய்யப்படும் எனவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். 

இதனிடையே போலி பத்திரப்பதிவு அதிமுக ஆட்சிக்காலத்திலேயே ரத்து செய்யப்பட்டுவிட்டது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மூர்த்தி, போலி பத்திரத்தை பதிவாளர் ரத்து செய்யும் அதிகாரம் தற்போது சட்டத்திருத்தம் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான போலி பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளது என்றும் தெரிவித்தார். 

click me!