இரவு முதல் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்... குடியரசுத் தலைவர் அதிரடி ஒப்புதல்..!

By Asianet TamilFirst Published Feb 25, 2021, 9:24 PM IST
Highlights

புதுச்சேரி சட்டப்பேரவை கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
 

புதுச்சேரியில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி அமைத்தது. நாராயணசாமி முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆனால், ஆளும் காங்கிரஸ் அரசுக்கும் ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த இந்த மோதலால் நலத்திட்டங்கள் முடங்கின. இந்நிலையில் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் பதவியிலிருந்து விலகினர். திமுக எம்.எல்.ஏ. ஒருவரும் பதவி விலகினார்.

 
இதனால் நாராயணசாமி அரசு மெஜாரிட்டி இழந்தது. எனவே சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி முதல்வர் நாராயணசாமிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டார். இதனையத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி தோல்வியடைந்தது. இதனால், நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் தமிழிசை, புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை செய்தார். இந்தநிலையில் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

 
அந்தக் கோப்புக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவை கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
 

click me!