இரட்டை இலக்கத் தொகுதிகளில் போட்டி... திமுக கூட்டணியில் சிபிஎம் அதிரடி முடிவு..!

By Asianet TamilFirst Published Feb 25, 2021, 9:00 PM IST
Highlights

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்டு வலியுறுத்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

கே. பாலகிருஷ்ணன் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு கொடுக்க வேண்டிய பணப்பலன்களை கொடுக்காமல் ரூ. 8,000 கோடி அரசு பாக்கி வைத்துள்ளது. தற்போது அரசு ஊழியர்களின் நிலைமையையும் அதேபோல ஆக்குவதற்காகத்தான் ஓய்வு பெறும் வயதை 60 ஆக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு கடுமையாகப் பாதிக்கப்படும். இன்று நடைபெறும் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழக அரசே காரணம்.
சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் உடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்துப் பேசுகிறது. அடுத்தகட்டமாக பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை திமுக நடத்தும். கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே இரட்டை இலக்கத்தில் போட்டியிட்டுள்ளது. வரும் தேர்தலிலும் இரட்டை இலக்கத் தொகுதிகளில் போட்டியிட வலியுறுத்துவோம். டிடிவி தினகரனை முதல்வர் வேட்பாளராக அமமுக அறிவித்துள்ளது பற்றி கேட்கிறீர்கள். அவரை பிரதமர் வேட்பாளராகக் கூட அறிவிக்கலாம். ஆனால், மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதானே முக்கியம்.
ஏற்கனவே ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன், மீண்டும் அதே தொகுதியில் நின்று டெபாசிட் வாங்கி காட்டட்டும். பிறகு, அவர் முதல்வரா என்பதைப் பார்க்கலாம். சசிகலாவின் வருகையால் தமிழக அரசியலில் எந்தத் தாக்கமும் ஏற்படாது. அதிமுகவில் வேண்டுமானால் கூடுதலாகக் குழப்பம் ஏற்படலாம். அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் இடையே நிறைய பிரச்னைகள் உள்ளன. அவர்கள் இணைவது எளிதில் சாத்தியமல்ல. பிரதமர் மோடி தேர்தல் முடியும் வரை தமிழகத்துக்கு அடிக்கடி வரச் செய்வார். வட மாநிலங்களில் அவருக்கு செல்வாக்கு குறைந்து விட்டதால், தென்மாநில மக்களை ஏமாற்ற வந்துகொண்டிருக்கிறார்.” என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
 

click me!