குடியரசுத் தலைவர் தேர்தலை இரண்டு தத்துவங்கள் மற்றும் இரண்டு கோட்பாடுகளுக்கு இடையே நடைபெறுகிற ஒரு போட்டியாகவே பார்க்கிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
நாட்டின் 16-வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 அன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். திரெளபதி முர்மு நேற்று தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா இன்று தன்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில் பங்கேற்க டெல்லி சென்றிருந்த விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இதையும் படிங்க: Presidential Election 2022 : யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல்..ராகுல் காந்தி, சரத் பவார் ஆஜர்!
அப்போது குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக திருமாவளவன் கருத்து தெரிவித்தார். “குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா இன்று தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார். இஸ்லாமியர் அடையாளம் என்ற அடிப்படையில் அப்துல் கலாமையும், தலித் அடையாளம் என்ற அடிப்படையில் ராம்நாத் கோவிந்தையும், பழங்குடியினர் அடையாளம் என்ற அடிப்படையில் தற்போது திரெளபதி முர்முவையும் வேட்பாளராக நிறுத்துகிற நிலைப்பாட்டை தொடர்ந்து பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் எடுத்து வருகின்றன.
இதையும் படிங்க: குடியரசு தலைவர் வேட்பாளர் பெயரை பாஜக அறிவித்ததும் முதலமைச்சருக்கு காய்ச்சல் வந்துவிட்டது- அண்ணாமலை கிண்டல்
ஆனால், பாஜகவின் இந்த முடிவுகளுக்கு நேர் மாறாக கொள்கை அடிப்படையிலே வேட்பாளர்களை நிறுத்துவது என்றும் அந்த வேட்பாளரை ஆதரிப்பது என்கிற முடிவையும் காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, விசிக, திரிணாமுல் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட எதிர்கட்சிகள் முடிவு செய்திருக்கின்றன. குடியரசுத் தலைவர் தேர்தலை இரண்டு தத்துவங்கள் மற்றும் இரண்டு கோட்பாடுகளுக்கு இடையே நடைபெறுகிற ஒரு போட்டியாகவே பார்க்கிறோம்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் நீடிக்கும் அரசியல் குழப்பம்... அம்மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!