
ஜெயிக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தும் மீரா குமாரை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கியுள்ளன பா.ஜ.க.வின் எதிர்கட்சிகள். ஜனநாயக வர்ணம் தடவப்பட்ட தேர்தல் அரசியலில் வெற்றி என்பது பெரிய விஷயமல்ல ஆனால் பங்கேற்புதான் அதி அவசியம். இந்த தேர்தலில் மீரா குமார் பெறப்போகும் வாக்குகள் ‘மோடி தலைமையிலான பா.ஜ.க.வுக்கு எதிராக இவ்வளவு பெரிய பலம் இருக்கிறது. மோடி ஒன்றும் சாய்க்கப்பட முடியாத சர்வபராக்கிரமசாலி இல்லை!’ என்பதை சர்வதேசத்துக்கும் இலவசமாக சுட்டிக் காட்டும் அற்புதமான வாய்ப்பு இது. மிக சாணக்கியத்தனமாக இதை பயன்படுத்த முயன்றிருக்கிறது காங்கிரஸ் தலைமையிலான இந்த புதிய தளம்.
ஆக மீரா ஜெயிக்க மாட்டார்தான். ஆனால் இந்த ஜனாதிபதி தேர்தலால், வெற்றி உறுதியாவிட்ட ராம்நாத்தை விட மிகப் பெரிய சந்தோஷத்தில் இருக்கும் பெண் வி.ஐ.பி. யார் தெரியுமா? அதுவும் அவர் எதிர்கட்சிகளின் வரிசையில் நிற்பவர்.
ஓ.கே. ஓவர் பில்ட் அப் வேண்டாம். சாட்சாத் கருணாநிதியின் மகள்தான் அந்த மகிழ்ச்சிப் பெண்.
காரணம்?....இருக்கிறதே!
அரசியல் உள்ளிட்ட பொதுவாழ்வியல் விஷயங்களில் ஆண்களுக்கு நிகராக அல்லது அதற்கும் மேலாக உரிமை தரப்பட வேண்டும் என்று அடிவயிறு வலிக்க பேசியவர் கருணாநிதி. ஆனால் தனது கட்சியில் தனது சொந்த மகளுக்கு அப்படியொரு ஜனநாயகத்தை, சுதந்திரத்தை, சம வாய்ப்பை அவரால் பெற்றுத் தரமுடியவில்லை என்பது நிதர்சனம்.
ஸ்டாலினின் விஸ்வரூப எழுச்சியால் தி.மு.க.வில் ஓரங்கட்டப்பட்ட மனிதர்களில் முதல் இருவர்களில் ஒருவர் அவரது தங்கை கனிமொழி. இன்னொருவர் அவரது அண்ணன் அழகிரி. ஆயிரம் விமர்சனங்கள் இருக்கின்றன அழகிரியின் வெளிப்படையான கட்சி விரோத செயல்பாடுகள் மீது. ஆனால் கனிமொழியை பொறுத்தவரையில் ஸ்டாலின் கடுப்பாக காரணம் தனக்கு எதிராக நிறைய உள் வேலைகள் பார்க்கிறார்கள், அதிலும் கனியின் அம்மா ராசாத்தி நிறையவே தனக்கு எதிரான லாபியை உருவாக்குகிறார் என்பது ஸ்டாலினின் அசைக்க முடியாத எண்ணம். இதன் வெளிப்பாடே இந்த ஒதுக்குதல் நடவடிக்கை. கழகத்தின் மகளிரணி மாநில செயலாளர், ராஜ்யசபா எம்.பி., என்று கெத்தான பதவிகளிருந்தும் கனியால் ஸ்டாலினுக்கு இணையாக இல்லாவிட்டாலும் துணையான லைம் லைட்டில் கூட வரமுடியவில்லை.
தி.மு.க. ஆட்சியிலேயே இல்லாவிட்டாலும் கூட கருணாநிதியின் பிறந்த நாளுக்கு இணையாக ஸ்டாலினின் பிறந்தநாள் கழகத்தால் கொண்டாடப்படுகிறது. அதிகாரத்தில் இருந்த போது அழகிரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தால் மதுர மண்ணே அதிரும். ஆனால் கழகம் ஆட்சி அரியாசனத்தில் அமர்ந்திருந்தாலுமே கூட கனிமொழியின் பிறந்தநாள் சின்ன சந்தோஷ அலைகளுடன் கடந்து போகும். ‘என் மகளும் தலைவரின் ரத்தம்தானே! மகன்களை போல் அரசியலில் இருக்கும் இந்த மகளுக்கு உரிய உரிமைகள் வழங்காமல் போவது ஏன்?’ என்பதுதான் ராசாத்தியின் ஆதங்கம்.
இதெல்லாம் இருக்கட்டும். ஜனாதிபதி தேர்தலால் கனிமொழிக்கு விளைந்த பயன் என்ன?
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் அமைத்த தளத்தில் தி.மு.க.வின் பிரதிநிதியாக கலந்து கொண்டு கலக்குபவர் கனிமொழிதான். முரசொலி மாறனுக்கு பின் டெல்லியில் கருணாநிதியின் மனசாட்சியாக செயல்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தயாநிதிமாறன் பல பிரச்னைகளால் நகர்ந்து நிற்கிறார். இடையில் டி.ஆர்.பாலு, ஆ.ராசா என்று சிலர் இதற்கு முயன்று தோற்ற நிலையில் கனிமொழிதான் நிலைத்து நிற்கிறார்.
பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் உருவாக்கிய மேடைக்கு பெரும் வர்ணம் தீட்டி, ஜனரஞ்சகப்படுத்தியது பெருமை தி.மு.க.வுக்கே உண்டு. கருணாநிதியின் வைரவிழா கூட்டத்தை முழுக்க முழுக்க இந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தியது அக்கட்சி. இந்த விழாவுக்கு வட இந்திய தலைவர்களை பெருமளவில் ஈர்த்து வந்தது கனிமொழியின் அரசியல்தான்.
ராஜீவ்காந்தியை போலவே பொதுவாக ராகுல்காந்திக்கும் தி.மு.க.வை ஆகாது. ஆனால் கருணாநிதியின் வைரவிழா மேடையில் ராகுல் பிரமாதப்படுத்திவிட்டார். அது மட்டுமா ஸ்டாலினின் வீட்டிற்கு சென்று அவரது பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ்ந்தார், கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்து குசலம் விசாரித்தார். ராகுலின் இந்தளவுக்கு ஈடுபாட்டுக்கு காரணங்களில் கனிமொழியின் அரசியல் மூவ்களும் ஒரு காரணம்.
சென்னை விழாவுக்கு ராகுல் வரும் முன்பாக, டெல்லியில் பா.ஜ.க.வுக்கு எதிரான தலைவர்களை கூட்டி ஒரு ஆலோசனையை நடத்தியது காங்கிரஸ். இதில் மம்தாவுடன் கலந்து கொண்டார் கனிமொழி. அந்த கூட்டத்தில் ராகுலும், கனிமொழியும் மிக தீவிரமாக, மிக சகஜமாக வெகுநேரம் அரசியல் ஆலோசனை மேற்கொண்டதை டெல்லி மீடியாக்கள் கட்டமிட்டு காட்டின.
இதன் நீட்சியாக சென்னை வந்த இடத்திலும் ராகுல் தி.மு.க. தலைவரின் குடும்பத்தோடு ஒட்டி உறவாடிவிட்டுத்தான் போனார். இதற்கு பின்புலம் கனிமொழியின் அரசியல் மூவ்தான். சோனியாவிடம் மிக வலுவாக பேசி அவர் மூலமாகவே ராகுலின் இந்த மாற்றத்திற்கும், தி.மு.க.வுடன் ராகுல் நெருங்கி வரும் முடிவுக்கும் கனிமொழி வித்திட்டார்.
இதன் பிறகு டெல்லியில் சோனியா தலைமையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல் குறித்தான ஆலோசனை நிகழ்வில் தொடர்ந்து பங்கேற்பது மட்டுமில்லாமல் சோனியாவின் அருகிலேயே இடமளிக்கப்படுமளவுக்கு பிரதானமாகியிருக்கிறார் கனி.
2ஜி வழக்கு தீர்ப்புக்கான கவுண்ட் டவுன் ஆரம்பமாகிவிட்டது. தீர்ப்பு எதிர்மறையாக வந்தால் அது ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்டோரை மிக கடுமையாக பாதிக்கும். ஒரு வேளை தி.மு.க. நம்புவது போல் ’அடிப்படையற்ற இந்த வழக்கு நீர்த்துப் போகும்.’ என்ற ரீதியில் சாதகமாக வந்தால் கனிமொழியை அது டெல்லி அரசியலில் அடுத்த மிகப்பெரிய கட்டத்துக்கு நிச்சயம் அழைத்துச் செல்லும்.
ஒரு வேளை அது பாதகமாக வந்தாலும் கூட தன்னை டெல்லி மீடியாக்களும், வட இந்திய மக்களும் தன்னை ஒரு அரசியல் கைதியாக மட்டுமே பார்க்க கூடிய அளவுக்கு தனக்கான கட்டமைப்பை உறுதி செய்துவிட்டார் கனி என்கிறார்கள் பொலிட்டிகல் பார்வையாளர்கள். ஆக ஒரு வேளை மீராகுமார் தோற்றாலும் கூட பர்ஷனலாக கனிமொழி இப்போதே வென்றிருக்கிறார் என்கிறார்கள். 2ஜி தீர்ப்பின் வாயிலாக பாதகங்கள் உருவானால் தனக்கு ஆதரவாக வட இந்திய அரசியலில் சில லாபிகளை உருவாக்குவதற்கான முகாந்திரத்தை இந்த தேர்தல் பணிகளின் மூலமே உருவாக்கிவிட்டாரம் கனி. இந்த தேர்தல் பணி அவருக்கு ஒரு ஜாக்பாட்டே என்பவர்கள், மீரா தான் தத்தளித்தாலும் கூட கனியை கரையேற்றிவிட்டார் என்கிறார்கள்.
ஆக இப்போது புரிகிறதா கனியின் மகிழ்ச்சிக்கான பின்னணி!