
அதிமுகவில் அணிகள் பெருகி விட்டன. தலைவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. ஒட்டுமொத்த ஆட்சி மற்றும் கட்சியை கட்டுப்படுத்த சரியான தலைமை இல்லாமல் போய்விட்டது என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டு வருகிறது. மறுபக்கம், குடியரசு தலைவர் தேர்தல் முடிந்தவுடன், அதிமுக ஆட்சியை மத்திய அரசு கலைத்து விடும். டிசம்பருக்குள் அடுத்த தேர்தல் நடத்தப்படும் என்றெல்லாம் யூகங்கள் வெளியாகி வருகின்றன.
ஆனால் இவை அனைத்தையும் விட, அரசியல் நோக்கர்கள் உற்று நோக்குவது, சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவின் சீராய்வு மனுவை மட்டுமே. சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, அந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி, உச்ச நீதி மன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு உச்சநீதி மன்றத்தில் அடுத்தமாதம் 3 ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுமா? அல்லது ஏற்றுக்கொள்ளப்படாதா? என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது. இந்த சீராய்வு மனுவை மையப்படுத்தியே, குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அரசியல் நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்கள் மீது, மணல் மன்னன் சேகர் ரெட்டி டைரியில் சிக்கிய ஊழல்கள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன. மறுபக்கம், சொத்து குவிப்பு வழக்கு, அந்நிய செலாவணி மோசடி வழக்கு உள்ளிட்ட வழக்குகள் சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை அச்சுறுத்தி வருகின்றன. இதை எல்லாம் பயன்படுத்தி, சசிகலா குடும்பத்தை அரசியலில் இருந்து முற்றிலும் ஓரம் கட்டவும், அதிமுக ஆட்சியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் விரும்புகிறது டெல்லி மேலிடம்.
ஆனால், சசிகலா குடும்பம் எல்லா இழப்புகளையும் சந்தித்து விட்டது. சசிகலாவே சிறையில் இருக்கிறார். இனியும் அவர்கள் பாதிக்கப்பட என்ன இருக்கிறது? என்று தினகரனின் தீவிர ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். அவர் சொன்னது சசிகலா குடும்ப உறுப்பினர்களின் கருத்தாகவே கருதப்படுகிறது. அதனால், சீராய்வு மனுவே, எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியை முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை, சசிகலாவின் சீராய்வு மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதில் சசிகலாவுக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என்றால், எடப்பாடி ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அப்படி இல்லை என்றால், தனக்கு பயன் இல்லாத கட்சியும், ஆட்சியும் மற்றவர்களுக்கு பயன்படாமல் போகட்டும் என்ற முடிவையே சசிகலா மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.
அதன்படி, எடப்பாடி அரசை கவிழ்க்க தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ க்களை தினகரன் பயன்படுத்த கூடும். அப்படி செய்தால், எடப்பாடி ஆட்சி பெரும்பான்மையை இழந்து தாமாகவே கவிழும். ஆகவே, குடியரசு தலைவர் தேர்தல் முடிந்தவுடன், மத்திய அரசே, வழக்குகளை காரணம் காட்டி ஆட்சியை கலைக்குமா? அல்லது, தமது ஆதரவு எம்.எல்.ஏ க்களை பயன்படுத்தி சசிகலா ஆட்சியை கவிழ்ப்பாரா? என்பதுதான் தற்போது அரசியல் அரங்கில் நடக்கும் விவாதம்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் யார் முதல்வராக இருந்தாலும், அவர்களை, பலவேறு குற்றச்சாட்டுக்களை காரணம் காட்டி பாஜக வளைத்துவிடும். ஆகவே, தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ க்களை திமுகவுக்கு ஆதரவளிக்க வைத்தால், திமுக ஆட்சி வர வாய்ப்பு உருவாகும் என்பதால், அந்த முயற்சியும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும், எடப்பாடி தலைமையிலான ஆட்சி, எஞ்சிய பதவி காலத்தை முழுமையாக பூர்த்தி செய்வதற்கு வாய்ப்பில்லை என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.