
ஜனாதிபதி தேர்தலில், தங்களது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் உள்ள காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, தென்னிந்தியாவில் காங்கிரசை பலப்படுத்த தீவிரமாக ஈடுபடவுள்ளார்.
இதற்காக ஜூன் முதல் தேதியான நாளை முதல் களத்தில் குதித்து, அரசியல் நடவடிக்கையை துவக்குகிறார் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக உள்ள எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் விருந்து வைத்தார்.
இதில் சரத்பவார், லாலு பிரசாத், சரத் யாதவ், சீத்தாராம் யெச்சூரி, மம்தா பானர்ஜி உள்பட பல்வேறு தேசிய தலைவர்களும், திமுகவின் கனிமொழியும் கலந்து கொண்டனர்.
இந்த சூழ்நிலையில் தென் மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் விதமாக ராகுல் தனது பயணத்தை துவங்க உள்ளார்.
முதல்கட்டமாக நாளை ஆந்திரா செல்லும் ராகுல், ஐதராபாத் அருகே உள்ள சங்கரரெட்டியில் பிரமாண்ட பேரணி நடத்துகிறார்.
இதைதொடர்ந்து ஜூன் 3ம் தேதி சென்னையில் நடக்க உள்ள திமுக தலைவர் கருணாநிதி வைர விழாவில் பங்கேற்கிறார்.
மீண்டும் ஜூன் 4ம் தேதி ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ், இடது சாரி கட்சி தலைவர்கள் உள்பட பலர் பங்கேற்கின்றனர் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.