கொரோனா தடுப்பூசியை தமிழகத்தில் தயாரியுங்கள்... கடிதம் எழுதிய திமுக எம்.பி.,!

Published : May 14, 2021, 12:41 PM IST
கொரோனா தடுப்பூசியை தமிழகத்தில் தயாரியுங்கள்... கடிதம் எழுதிய திமுக எம்.பி.,!

சுருக்கம்

தமிழகத்தில் உள்ள தடுப்பு மருந்து உற்பத்தி நிலையங்களில் கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு, தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் கடிதம் அனுப்பியுள்ளார்.  

தமிழகத்தில் உள்ள தடுப்பு மருந்து உற்பத்தி நிலையங்களில் கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு, தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ‘’சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் ஆய்வகம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் (எச்.எல்.எல் பயோடெக் ), குன்னூரில் உள்ள பாஸ்டியர் இன்ஸ்டிட்யூட் ஆகிய மூன்று இடங்களிலும், அதிக அளவில் தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளதால், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்து உற்பத்தியை துவங்குவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க வேண்டும்.

மேலும், கடந்த 2012 ம் ஆண்டு 594 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட செங்கலபட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகமானது ஏறக்குறைய இன்றுவரை பயன்பாட்டுக்கு வராத நிலையில், அனுமதிக்கப்பட்ட 408 பணியிடங்களில் 251 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. குன்னூரில் உள்ள பாஸ்டியர் இன்ஸ்டியூட் வளாகமானது இந்தியாவின் தொன்மையான தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று. இந்த மையங்களை பயன்படுத்திக்கொள்வது தொடர்பாக ஏற்கனவே 26.04.2021 அன்று சென்னை உயர் நீதிமன்றத்திலும், 01.05.2021 மற்றும் 11.05.2021 ஆகிய தேதிகளில் ட்விட்டர் தளம் வாயிலாகவும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 10.05.2021 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில், இத்தகைய தடுப்பு மருந்துகளை தயாரிப்பதற்கான போதிய தொழில் நுட்ப வசதிகள் இந்த மையங்களில் இல்லை எனவும், அதேபோல் இரண்டு முறை டெண்டர் கோரப்பட்டும் செங்கல்பட்டில் உள்ள தடுப்பு மருந்து ஆலையை டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் இந்த மூன்று மையங்களையும் பயன்படுத்திட இரண்டு வழிகள் உள்ளதாகவும், முதலாவது ஏற்கனவே இந்த தடுப்பு மருந்துகளுக்கான காப்புரிமை பெற்று தடுப்பூசி தயாரிப்பில் உள்ள சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் ஆகியவற்றுக்கு இத்தகைய தடுப்பு மருந்து தயாரிப்பு மையங்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்கி தடுப்பூசிகளை தயாரிக்கலாம். இரண்டாவதாக, 1970 ஆண்டு பிரிவு 92 இந்திய காப்புரிமைச் சட்டத்தைப் பயண்படுத்தி இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போதுள்ள பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு இந்த மருந்திற்கான காப்புரிமையை மத்திய அரசே வழங்கி இந்த மூன்று மையங்களிலும் தடுப்பு மருந்து உற்பத்தியை துவங்க முடியும்.

எனவே, இவையனைத்தையும் கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள இந்த மூன்று இடங்களிலும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்து உற்பத்தியை துவங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’எனக் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை